‘‘ட்விட்டர் எதிர்காலம் நிச்சயமற்றது’’-  ஊழியர்களிடம் பராக் அகர்வால் ஆதங்கம்

வாஷிங்டன்: ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது, ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் இந்த கருத்தை அவர் கூறியுள்ளார்.

அண்மையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க்.

அதையடுத்து, ட்விட்டர் மற்றும் மஸ்க் என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய பாரக் அகர்வால் கூறுகையில் ‘‘ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ட்விட்டர் ஊழியர்களுடன் கேள்வி-பதில் அமர்வில் எலான் மஸ்க் பங்கேற்பார் என தெரிகிறது. இதனை ஊழியர்களிடம் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.