திருப்பதி அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்: இறந்த மகனை 90 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற தந்தை

அமராவதி: திருப்பதி அரசு மருத்துவமனையில் இறந்த மகனை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் அதிக கட்டணம் கேட்டதால் கோபமடைந்த தந்தை சோகத்துடன் மகனை தோலில் சுமந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம் ராஜம்பேட்டை அடுத்த பெத்வேல் கிராமத்தைச் சேர்ந்தவர்   நரசிம்மலு. இவர் விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது 9 வயது மகன் ஜெசேவாவிற்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப் பட்ட நிலையில், ராஜம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், சிறுவனை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனையடுத்து சிறுவனை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஜெசேவா உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸை அணுகியுள்ளார். அவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிகப்படியான பணம் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க இயலாததால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகனின் உடலை தனது உறவினர் ஒருவரின் பைக்கில் வைத்து 90 கிலோமீட்டர் எடுத்து சென்றார். இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் வீடியோக்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் வைரலாக மாறிய நிலையில், மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணா இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் வைத்தே இறந்த மகனின் உடலை தந்தை சுமந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.