விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 50000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம்,மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை,திறன் மேம்பாட்டு துறை,தொழிலாளர் நலன் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை களின் மீதான விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி,  தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயி களுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதன்படி, 24,805 டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16.67 கோடி கூடுதலாக செலவாகும் எனவும் குறிப்பிட்டார்.

4.8 லட்சம் டன்கள் வெளிநாட்டு நிலக்கரியினை இறக்குமதி செய்ய திறந்த மின் ஒப்பந்தப்புள்ளி மூலம், E-reverse ஏலத்துடன் மே 2022 மற்றும் ஜூன் மாதங்களுக்கு வாங்குவதற்கு, உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எரிசக்தி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எரிசக்தி துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் 100 சதவீத நிலையை சுமை காரணியுடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு வரும் ஒன்றிற்கு 26.28 மில்லியன் டன்கள் நிலக்கரி தேவைப்படுகிறது.

இத்தேவைக்கான உள்நாட்டு நிலக்கரியை மகாநதி நிலக்கரி நிறுவனத்துடன் (MCL) நிலக்கரி எரிபொருள் வழங்கும் ஒப்பந்தங்கள் மூலமாக (Fuel Supply Agreements -FSAs)19.563 மில்லியன் டன் மற்றும் சிங்கரேனி நிலக்கரி நிறுவனத்துடன் (SCCL) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலமாக 4 மில்லியன் டன் பெறவும் மொத்தமாக 23.563 மில்லியன் டன் நிலக்கரி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டில் சுரங்கங்களில் இருந்து பெறப்பட்ட நிலக்கரியின் அளவானது, கடந்த 10 ஆண்டுகளில் பெறப்பட்ட நிலக்கரியின் அளவை விட அதிகம்.

தற்போது ஈசிஎல் சுரங்கத்தில் இருந்து 2 லட்சம் டன் நிலக்கரியை எண்ணூர் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு ஆய்வில் உள்ளது. 2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உள்நாட்டு நிலக்கரி விநியோகம் ஒரு நாளைக்கு 12.4 ரேக்குகள் மட்டுமே கிடைக்கப்பெற்றது. அனைத்து மின் நிலையங்களும் இயங்குவதற்கு 20 முதல் 22 ரேக்குகள் வரை நிலக்கரி தேவைப்படுகிறது.

கோடை காலத்தின் உச்சக்கட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், தொடர்ச்சியான உற்பத்தியைத் தக்க வைப்பதற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் GCV 5000 GAR வெப்பதிறன் கொண்ட 4.8 லட்சம் டன்கள் வெளிநாட்டு நிலக்கரியினை இறக்குமதி செய்ய திறந்த மின் ஒப்பந்தப்புள்ளி (இ-டெண்டர்) மூலம் மின்- தலை கீழ் (E-reverse) ஏலத்துடன் மே 2022 மற்றும் ஜூன் மாதங்களுக்கு வாங்குவதற்கு, உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே தொடர்கள் போக்குவரத்துக்கு இருந்தும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நாளொன்றுக்கு தேவைப்படும் 16 ரயில் தொடர்களுக்குப் பதிலாக, தற்போது நாளொன்றுக்கு 12 ரயில் தொடர்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.