3 மாதங்களுக்கு கடும் வெயில் தீ பிடிக்கும் மின் வாகனங்களை உடனடியாக திரும்ப பெறுங்கள்: ஒன்றிய அமைச்சர் கட்கரி அறிவுரை

புதுடெல்லி: காற்று மாசை குறைக்கும் வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக கார்,் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட மின்சார வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரியும் சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றன. இதனால், இந்த வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.இப்பிரச்னை தொடர்பாக விசாரிக்க ஒன்றிய அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. மேலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஓலா, ஒகினாவா, பியூர்இவி உள்ளிட்ட நிறுவனங்கள் பிரச்னைக்குரிய ஆயிரக்கணக்கான வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளன. இந்த வாகனங்கள் முழு பரிசோதனைக்கு  உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டியில், `மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகரிப்பதால் மின்சார வாகன பேட்டரியில் பிரச்னை ஏற்படுகிறது. அதிகளவு வெப்பத்தினால் மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கின்றன என எண்ணுகிறேன்.  அதே நேரம், மனித உயிர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, எனவே, குறைபாடுகள் உள்ள வாகனங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, தனது பரிந்துரைகளை அரசிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.