உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அழுத்தம் தரவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் 7-வது ரைசினா சர்வதேச மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். போலந்து, ஸ்லோவேனியா உள்ளிட்ட 90 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். முதல்நாள் மாநாட்டில் ஜனநாயக மறுபரிசீலனை, பருவநிலை மாற்றத்தை கையாளுதல் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு அமைச்சர்களுடன், இந்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். முன்னதாக தொடக்க விழாவில் பேசிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரே வர்த்தக பாதையை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 2 நாள் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. நேற்று நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியின் விவாதத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசியதாவது:

தற்போது உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் நாட்டைப் பற்றி பேசிவருகின்றன. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும். அந்நாட்டு மக்கள் அங்கு என்ன பாடுபட்டனர் என்பதை யாரும் மறக்கவில்லை. அதைப் போலத்தான் தற்போதைய உக்ரைன் நிலையும். இது ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு அறை கூவலாகக் கூட இருக்கலாம்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். உக்ரைனில் நடந்து வரும்போரை உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். போரை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும். இதன்மூலம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.