காத்துவாக்குல ரெண்டு காதல்: "கல்யாணத்துக்கு முன்னாடி செமயா ஒரு படம்"- விக்னேஷ் சிவன் பகிரும் ரகசியம்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூவரையும் வைத்து முக்கோணக் காதல் கதை ஒன்றை வித்தியாசமான ட்ரீட்மென்ட்டில் இயக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். `காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற அந்தப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி இருவரையுமே ஒரு பேட்டியில் பிடித்தோம். இருவரும் சொன்ன ரகளையான பதில்கள் இங்கே…

“காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தோட ஸ்டார்ட்டிங் ரெண்டு சீன் சொன்னார். அப்புறம் இன்டர்வெல் ப்ளாக் சொன்னாரு. விக்கியோட ரைட்டிங் மேல எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை இருக்கு. படத்தோட ஐடியா எனக்கு தெரியும். இந்த ஐடியாவை ‘நானும் ரெளடிதான்’ படம் பண்ணும் போதே அவர் என்கிட்ட சொல்லியிருந்தார். அதனால நானும் நடிக்க தயாரா இருந்தேன். சீன்ஸ் எல்லாம் லட்டு மாதிரி எழுதி வெச்சிருந்தார்” என விஜய் சேதுபதி ஆரம்பிக்க,

விஜய் சேதுபதி

“இந்தக் கதையை விஜய் சேதுபதிதான் பண்ணணும்னு முடிவா இருந்தேன். ரெண்டு பேரும் சேர்ந்துதான் பண்றோம்னு பேசினதுதான். அந்த ரோலை அவ்வளவு கன்வின்சிங்கா அவரால மட்டும்தான் பண்ண முடியும். அப்படிப் பண்ணியிருக்கார். இந்தப் படத்தை யாராவது வேற மொழில ரீமேக் பண்றப்போ விஜய் சேதுபதி எவ்வளவு சிறப்பா இதைப் பண்ணியிருக்கார்னு எல்லாருக்கும் புரியும். அப்படி அழகாக ஸ்க்ரீனுக்கு பொருந்தி போயிருக்கார்” என விக்னேஷ் சிவன் நெகிழ, இருவரிடமும் கேள்விகளை வீச ஆரம்பித்தோம்.

விஜய் சேதுபதியிடம்: படத்தோட ட்ரெய்லர் பார்த்துட்டு நிறையப் பேர் கமென்ட்ஸ் பண்ணியிருக்கறதைப் பார்த்தீங்களா?

“இந்த கமென்ட்ஸ்லாம் பார்க்கற வழக்கமே இல்ல. வீட்டுல பொண்டாட்டியும் ‘வாழ்ந்து இருக்கீங்க’ன்னு சொன்னா. வேலைப் பார்க்குற இடத்துல பார்க்கும் போதுதான் தெரியும், வாழ்ந்திருக்கோமா இல்ல, வருத்து எடுத்தாங்களானு! வேலைப் பார்க்குற இடத்துல வேலை மட்டும்தான். ஆனா, இந்தப் படத்துல ரெண்டு பெரிய நடிகைகள்கூட வேலை பார்த்திருக்கோம். அது நல்ல அனுபவம். மத்தப்படி இந்த சீன் பேப்பரை கையில கொடுத்ததுக்கு அப்புறம் பெர்ஃபார்ம் பண்றது கஷ்டம். நிறைய சீன்ஸ் எடுக்குறப்போ ரொம்ப திணறியிருக்கோம். படத்துல நிறைய இடங்கள் ரொம்பவே மெனக்கெட்டுதான் எல்லாரும் நடிச்சோம்.”

விஜய் சேதுபதி, நயன்தாரா | காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவனிடம்: ராம்போ கேரக்டர் எப்படி டிசைன் பண்ணுனீங்க?

“வலிமையான ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அவங்களைக் காதலிக்காம இருக்கவே முடியாதுன்னு சொல்ற மாதிரியான பொண்ணுங்க. அவங்களை ஒருத்தர் லவ் பண்றப்போ என்ன நடக்குதுனு இவர் மூலமா சொல்லியிருக்கேன். ஸ்க்ரீன்ல இவர் மட்டும்தான் அதுக்கு சரியா இருப்பார். காதல் சீன்ஸ் விஜய் சேதுபதிக்கு நல்லா வரும். ஏன்னா… நிறைய அன்பும் காதலும் மனசுல வெச்சிருக்கார்.”

விஜய் சேதுபதியிடம்: விக்கியோட பாடல் வரிகள் கேட்குறப்போ எப்படியிருக்கும்?

“நிறைய வியந்திருக்கேன். எப்படி வார்த்தைகளைப் பிடிச்சு எழுதறாருன்னு ஆச்சரியமா இருக்கும். இலகுவா இருக்கும். ‘நானும் ரெளடிதான்’ படத்துல அவர் எழுதுன வரிகள் செமயா இருக்கும். ‘விக்ரம்’ படத்துலயும் என்னோட கதாபாத்திரத்துக்குப் பாட்டு எழுதி கொடுத்திருக்கார். விக்கியோட வரிகளை பாராட்டிக்கிட்டே இருப்பேன். ‘பாடல் எழுதுன பழக்கமானு தெரியல, இவர் எழுதுற டயாலக்ஸ்லக்கூட ரிதம் இருக்கு’ன்னு சொல்லுவேன். ஏதாவது ஒரு டயலாக் வேணாம்ன்னு எடுத்துட்டா, ‘கனெக்ட் ஆக மாட்டேங்குது, இல்ல வேற ஒண்ணு வெக்க வேண்டியதா இருக்கும்’ன்னு சொல்லுவேன். அப்படி, இவர் நடுவுல எழுதுனதை உடைக்கவே முடியாது.

படத்துல புரொபோசல் சீன் ஒண்ணு செமயா எழுதியிருக்கார். அந்தந்த இடத்துக்கு ஏத்த மாதிரி டயலாக்ஸ் எழுதியிருப்பார். இவரோட சீன்ஸ் பார்த்துட்டு மயங்கியிருவேன். ‘எப்படி இதை எழுதுற விக்கி’ன்னு கேட்பேன். அம்மா சென்ட்டிமென்ட் சீன்ஸ் எடுத்திருந்தோம். விக்கிக்கு சரியா இல்லன்னு திரும்பவும் எடுத்தார். ‘விக்கி, நீ எழுதுனதை பார்த்தே மயங்கிட்டேன். தயவுசெஞ்சு இதை வெச்சிரு’ன்னு சொன்னேன். ரைட்டிங்ல விக்கி பெரிய கில்லாடி. அப்ரோச் பண்ற ஆங்கில் புரிஞ்சிக்கிட்டா உணர்வுபூர்வமா பண்ண முடியும். ‘நானும் ரெளடிதான்’ படத்துல இதை புரிஞ்சிக்கிட்டு நடிக்குறது சவாலா இருந்தது. இப்போ விக்கி யார்ன்னு தெரிஞ்சிக்கிட்டதுனால ஈஸியா இருக்கு. எதுவா இருந்தாலும் விக்கியிடம் கேள்வி கேட்க முடியும். நிறைய ஆப்சன்ஸ் வெச்சிருப்பார். எல்லாத்தையும் டக்கு டக்குனு மொபைல்ல அடிச்சுக் கொடுத்திடுவார்.”

காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவனிடம்: எங்கே இருந்து வரிகள் பிடிப்பீங்க?

“எழுதுறது ரொம்ப பிடிக்கும். ஒரு லைன் கிராஸ் பண்ணி இன்னொரு லைன்னுக்குப் போறப்போ மெனக்கெடுவேன். ஏதோ ஒப்புக்கு எழுதக் கூடாதுனு நினைப்பேன். முதல் வரியைவிட ரெண்டாவது வரி இன்னும் நல்லாயிருக்கணும்னு மெனக்கெடுவேன். பெட்டரா போயிட்டே இருக்கணும்னு நினைப்பேன். மத்தப் படங்களுக்கு எழுதறப்பவும் இதே பிராசஸ்தான்.”

விக்னேஷ் சிவனிடம்: ரொம்ப ஜாலியா இருக்கீங்க, ஷூட்டிங் ஸ்பாட் எப்படியிருக்கும்?

“சந்தோஷமா செய்யுற வேலை. அதனால, எல்லாரும் ஜாலியா இருப்போம். படம் எடுக்குறதைவிட வேற என்ன வேலையிருக்கு. ‘கரும்பு திங்குறதுக்குக் கூலி எதுக்கு’ங்குற மாதிரிதான் இதுக்காக சம்பளமும் கொடுக்குறாங்க. பைக், கார் எல்லாம் இருக்கு. ஒரு வேலையை செஞ்சு முடிச்சிட்டு, அதை எடுத்து ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ வேற லெவல் ஃபீல் கிடைக்கும். சினிமா எடுக்காம வேற எந்த வேலை செஞ்சிருந்தாலும் இந்த குட் ஃபீல் கிடைச்சிருக்குமான்னு தெரியல. மத்தவங்க பார்க்குற வேலைகளைப் பார்த்துகூட பொறைமைப்பட்டது இல்ல. பெரிய இயக்குநர்கள் மாதிரி வரணும் மட்டும்தான் மனசு சுத்திக்கிட்டு இருக்கும். இந்த வேலைக்கு மேல திருப்தியான வேலை எனக்கு இல்லை. படம் எடுத்துக்கிட்டு இருந்தாலே போதும்னு தோணும்.”

காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதியிடம்: படத்தோட டைட்டில் கேட்டப்போ உங்களுக்கு எப்படியிருந்தது?

“கதை சொன்னப்போதே டைட்டிலா இதுதான் இருந்தது. எங்கேயிருந்து இந்தப் பேரை பிடிச்சான்னுதான் தெரியல.”

விக்னேஷ் சிவனிடம்: நயன் கதை கேட்டுட்டு என்ன சொன்னாங்க?

“‘நானும் ரெளடிதான்’ டைம்லயே நயன்கிட்ட இந்தக் கதையை சொல்லிட்டேன். படம் போயிட்டு இருந்தப்போ எங்க ரிலேசன்ஷிப்போட ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ். அப்போ டின்னர் போனப்போ ஒன்லைன் சொன்னேன். இந்தப் படத்துல கண்மணி கேரக்டர் நயன் பண்ணினா நல்லாயிருக்கும்னு நினைச்சியிருந்தேன். ஏன்னா, ரொம்ப அழுத்தமான, ஆழமான கேரக்டர். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி செமயா ஒரு படம் பண்ணணும்னு யோசிச்சு இருந்தோம். அப்போ, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பண்ணிட்டுதான் கல்யாணம்னு நானும் யோசிச்சு இருந்தேன். 2016ல எடுக்க வேண்டியது. ஆனா, அப்ப காஸ்ட்டிங் அமையல. அப்புறம் 2019-ல எடுக்க முடிவு செஞ்சேன். ஆனா, கோவிட் லாக்டௌன் வந்திருச்சு. ஒருவழியா, இப்போ 2022-ல படம் எடுத்தாச்சு.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா

இந்தப் படம் எடுத்ததுல நயன் செம ஹாப்பி. எப்போதும், என்னோட ஸ்க்ரிப்ட், பாட்டு வரிகள் எல்லாமே நயன்கிட்ட சொல்லுவேன். எல்லாமே தெரியும் அவங்களுக்கு. என்னோட முதல் விமர்சனம் எப்பவும் அவங்கிட்ட இருந்துதான் வரும். எங்க ரெண்டு பேருக்கும் இந்தப் படம் ரொம்ப க்ளோஸ் டு ஹார்ட். ‘நானும் ரெளடிதான்’ படத்துல ‘தங்கமே’ பாட்டு எழுதுனப்போ நயனை ஹீரோயின் ஸ்டேஜ்ல வெச்சு எழுதியிருப்பேன். இப்போ, இந்தப் படத்துல ‘நான் பிழை’ பாட்டு எழுதுனப்போ பார்த்து பார்த்து எழுதுனேன். ஏன்னா, அவங்ககூட ரிலேசன்ஷிப்ல இல்லாதப்போதே செமையா பாட்டு எழுதிட்டு இப்போ இன்னும் பெட்டரா பண்ணலைன்னா எப்படின்னு மெனக்கெட்டேன். அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி பாட்டு எழுதுனதுல சந்தோஷம். ஏன்னா, எப்பவும் அவங்களை இம்ப்ரேஸ் பண்ணணும்னு நினைப்பேன்” என விக்கி சொல்ல, “ரொம்ப ஸ்வீட்டா சொன்ன போ” எனத் தோளில் தட்டினார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் முழு வீடியோ பேட்டியை இங்கே காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.