கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி. ஒதுக்கீடு ரத்து: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்துவந்த எம்.பி. ஒதுக்கீடு சீட் ரத்து செய்யப்பட்டது. மேலும், கே.வி. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, எம்.பி. ஒதுக்கீடு சீட் தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பு வரும்வரை அந்தச் சலுகையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கே.வி. பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வந்த 3 வாரங்களில் அறிவிப்பை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்.பி ஒதுக்கீடு முறைப்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவரவர் தொகுதிக்கு உட்பட்ட கே.வி. பள்ளியில் ஆண்டுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் மொத்தம் 10 மாணவர்களை சேர்த்துவிடும் அதிகாரம் இருந்தது. இந்நிலையில், இந்த நடைமுறையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்த நடைமுறையையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்.பி.க்கள் ஒதுக்கீடு சீட் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கல்வி அமைச்சகத்தின் ஊழியர்களில் 100 பேரின் குழந்தைகளுக்கு சீட் என்ற ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் குழந்தைகள் மற்றும் எம்.பி.க்களின் பேரப் பிள்ளைகள், கேந்திரிய வித்யாலயா ஓய்வு பெற்ற ஊழியர்களின் பேரப் பிள்ளைகள், பள்ளி நிர்வாகக் குழு சேர்மனின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் வழங்கப்படும் சீட் ஆகியனவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆனால், சில புதிய ஒதுக்கீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய போலீஸ் படையான CRPF, BSF, ITBP, SSB, CISF, NDRF மற்றும் அசாம் ரைஃபில்ஸ் படையில் பணியில் உள்ள குரூப் பி, சி ஊழியர்களின் குழந்தைகளுக்காக 50 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. PM CARES திட்டத்தின் கீழ் சலுகைகள் பெறத் தகுதியான குழந்தைகளுக்கு கே.வி. பள்ளிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-22 காலகட்டத்தில் நாடு முழுவதும் 7,301 மாணவர்கள் எம்.பி.க்கள் இட ஒதுக்கீடு முறையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.