தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து: தலைவர்கள் இரங்கல்| Dinamalar

புதுடில்லி: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவில், தேரின் அலங்கார தட்டி உயரழுத்த மின் பாதையில் உரசியது. இதில் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி:

தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட 11 உயிர்கள் பலியாகியது வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

நரேந்திர மோடி, பிரதமர்:

தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.

ஆர்.என்.ரவி, தமிழக கவர்னர்:

தஞ்சாவூரில் தேர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட விபத்து வேதனையளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

ஸ்டாலின், தமிழக முதல்வர்:

தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள 15 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்:

தஞ்சாவூர்,களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன்,சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் , காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்:

தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விப்பட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.