தேர் திருவிழாவில் நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி 11 பேர் பலி.. முதலமைச்சர் நேரில் ஆறுதல்..!

தஞ்சை அருகே தேர்த்திருவிழாவின் போது உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தஞ்சை விரைகிறார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு அப்பர் கோவிலில், 94வது ஆண்டு அப்பர் குருபூஜை நேற்றைய தினம் நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நள்ளிரவில் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அதிகாலையில் பூதலூர் சாலையில் தேர் வந்த போது, ஒரு வீட்டில் பூஜை செய்துவிட்டு தேரை திருப்ப முயன்றுள்ளனர். அங்கு சாலை விரிவாக்கப் பணிக்காக குழி தோண்டப்பட்டு மண்ணைக் கொண்டு மூடப்பட்டிருந்தது. அந்த மணல் மேட்டில் தேரின் சக்கரம் சிக்கி, தேர் சாய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது தேர் உயரழுத்த மின்கம்பியின் மீது உரசியதில், தீப்பொறி கிளம்பி மரத்தினால் செய்யப்பட்ட அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது.

இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையில், தேருக்கு அருகில் இருந்த 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் மின்சாரம் தாக்கியும், தீயில் எரிந்தும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கும் முதலமைச்சர் ஆறுதல் கூறுகிறார்.

உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதலமைச்சர் அங்கிருந்து தஞ்சை செல்கிறார். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் விபத்து நிகழ்ந்த இடத்தை அவர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

 மின் விபத்து குறித்து பேசிய தஞ்சை மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி பானுப்பிரியா, தேர் ஊர்வலம் முறையாக அனுமதி பெறாமல் நடைபெற்றதாக தெரிவித்தார். சப்பரத்தின் மேற்பகுதியில் அலங்கரிக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் அதிக உயரம் கொண்டிருந்ததாலேயே உயரழுத்த மின் கம்பியின் மீது உரசியதாக அவர் கூறினார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.