பிரியங்காவை தலைவராக்க பிரசாந்த்கிஷோர் விரும்பினார்- காங்கிரசில் இணையாதது குறித்து புதிய தகவல்

புதுடெல்லி:

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணையும் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்தது.

2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக அறிக்கையை பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சமர்பித்தார். கட்சியை வலுப்படுத்த அவர் பல ஆலோசனைகளை வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி பல முறை ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்ட குழுவை சோனியா நியமித்தார். அதோடு பிரசாந்த் கிஷோரையும் காங்கிரசில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு இறுதிக்கட்ட ஆலோசனையும் நடத்தியது.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மறுத்து விட்டதாக தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜே வாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இந்த தகவலை வெளியிட்ட சிறிது நேரத்தில் பிரசாந்த் கிஷோர் ஒரு டுவிட் செய்தார்.

“அதில் காங்கிரசில் வேரூன்றி இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சீர்திருத்தம் மூலமாக சரி செய்வதற்கு கூட்டு தலைமை அவசியம்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பிரசாந் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாதது ஏன்? என்பது தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது பிரசாந்த் கிஷோர், சந்திர சேகர் ராவுடன் தெலுங்கானா தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்தார். இது காங்கிரசில் உள்ள பல தலைவர்களுக்கு அதிருப்தியை அளித்தது.

மேலும் தேர்தலில் வெற்றி பெற்றால் அது பிரசாந்த் கிஷோரின் வெற்றியாக கருதப்படும். இதனால் அவர் இணைவது சரியாக இருக்காது என்று மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் மற்றும் தலைமை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் சில மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

பிரதமர் வேட்பாளர், காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற 2 பேரை கொண்டு வர பிரசாந்த் கிஷோர் விரும்பினார். அதற்காக அவர் பிரியங்காவை காங்கிரஸ் கட்சி தலைவராக்க விரும்பினார். ஆனால் மேலிடமோ ராகுல் காந்தியை தான் மீண்டும் தலைவராக்குவது என்று விரும்பியது.

பிரசாந்த் கிஷோரின் இந்த யோசனையை காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரும்பவில்லை. மேலும் பீகார், மராட்டியம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கூட்டணி தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தையும் ஏற்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் தனக்கு உயர் அதிகாரம் கொண்ட பதவி வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குஜராத், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநில தேர்தல்களின்போது முடிவு எடுக்கும் அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையும் காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை.

உயர் அதிகாரம் கொண்ட பதவி கிடைக்காதது, மாநில தேர்தல்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடம் வழங்க தயங்கியது போன்ற காரணங்களால் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணையவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.