உதவி வனப்பாதுகாவலர் தேர்வு: அனைத்து பாடப்பிரிவு பொறியியல் பட்டதாரிகளையும் டி.என்.பி.எஸ்.சி அனுமதிக்க வேண்டும் – Dr. அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு உதவி வனப்பாதுகாவலர்களை (Assistant Conservator of Forests) தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிக்கையை நடப்பாண்டின் நவம்பர் மாதம் வெளியிடவிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இத்தேர்வில் பொறியியல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் பாகுபாடு இம்முறையாவது நீக்கப்பட வேண்டும் என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக வனத்துறையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வனப் பாதுகாவலர், வனப்பாதுகாவலர் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில்  உள்ள உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வுகள் கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு, திசம்பர் மாதம் முதல் நடத்தப்பட்டன. அதன்பின் 5 ஆண்டுகள் கழித்து வரும் நவம்பர் மாதம் இப்பணிக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிக்கை வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் பொறியியல்  மாணவர்களுக்கு இத்தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் 8 வகை இளம் அறிவியல் (பி.எஸ்சி) படிப்புகள், 8 வகை பொறியியல் படிப்புகள் உள்ளிட்ட 21 வகையான பட்டப்படிப்புகள் மட்டும் தான் அடிப்படைத் தகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பிற அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டங்களைப் பெற்றவர்கள் இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க முடியாது. பிற அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளை இந்தப் பணிக்கு அனுமதிப்பதில்லை என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தவறான புரிதலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தானே தவிர, அதை நியாயப்படுத்துவதற்கு வலுவான காரணங்களோ, ஆதாரங்களோ தேர்வாணையத்திடம் இல்லை.

எடுத்துக்காட்டாக வன நிர்வாகத்திகு எந்த தொடர்பும் இல்லாத இளம் அறிவியல் கணிதம், புள்ளியியல்  படித்தவர்களும், கணினி அறிவியல், மின்னியல், மின்னனுவியல், சிவில் ஆகிய பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் இதற்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வனத்துடன் தொடர்புடைய மற்ற பொறியியல் பட்டங்கள் இப்பணிக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

கணிதம், புள்ளியியல் படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் 10 அல்லது 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருந்தால் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்று கூறுகிறது. ஆனால், இதே பாடங்களை பொறியியல் படிப்பில் படித்த செராமிக் தொழில்நுட்பம்,  தொழில்துறை உயிரி தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், துணி தொழில்நுடபம், ரப்பர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறியியல் பட்டதாரிகள் இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?

கணிதம், புள்ளியல் பட்டம் பெற்றவர்கள் 10 அல்லது 12-ஆம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருந்தால், அவர்களால் உதவி வனப்பாதுகாவலர் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் நம்புகிறது. தமிழ்நாட்டில் எந்தப் பட்டப்படிப்பு  படித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக பத்தாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருப்பார்கள். அதனடிப்படையில், எந்த ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களையும்  உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க அனுமதிப்பதில் தவறு இல்லை.

உதவி வனப்பாதுகாவலர் பணியை உயர்ந்த தகுதி நிலை கொண்ட பணிகளுக்காக இந்திய வனப் பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அதை விட குறைந்த தகுதி நிலை கொண்ட வனத்தொழில் பழகுனர் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும், வனவர் தேர்வை வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் நடத்துகின்றன. 

இந்த அனைத்து தேர்வுகளிலும்  ஏதேனும் ஒரு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அவ்வாறு இருக்கும் போது அதே மாதிரியான பணித் தன்மையைக் கொண்ட உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு மட்டும்   அறிவியல் சார்ந்த பொறியியல் படிப்புகளும், தொழில்நுட்பப் படிப்புகளும் மறுக்கப்படுவது சமூக அநீதி. அதுமட்டுமின்றி இது சமவாய்ப்புக் கொள்கைக்கும், சம நீதி கொள்கைக்கும் எதிரான நிலைப்பாடாகும்.

எனவே, வரும் நவமபர் மாதம் தமிழக அரசுப் பணி தொகுப்பு 1ஏ-வில் வரும் உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் போது எந்தவொரு பொறியியல் பட்டம் பெற்றவரும் அதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்வாணையத்திற்கு அரசும், வனத்துறையும் உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.