சென்னை அருகே பனந்தூரில் புதிய விமான நிலையம்… மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா தகவல்

சென்னை அருகே பனந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் சென்னை அருகே அமைய இருக்கும் க்ரீன்பீல்ட் விமான நிலைய பணிகள் குறித்தும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு சிந்தியா பதிலளித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மதுரை விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதன் காரணமாக விமான நிலையம் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே உள்ளது.

காட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும் இரவு நேரங்களிலும் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சென்னை க்ரீன்பீல்ட் விமான நிலையத்திற்காக திருப்போரூர், படாளம், பனந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இடங்கள் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நான்கு இடங்களையும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 முதல் 17 ம் தேதி வரை மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்தது அதில் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள பனந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்கள் புதிதாக விமான நிலையம் அமைக்க தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், ஏரிகள், குளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் விமான போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கட்டுமானங்கள் குறித்து அடுத்தகட்ட ஆய்வு நடைபெற வேண்டி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.