20 ஏக்கர் பரப்பளவு; ரூ.23 கோடி மதிப்பு; இந்தியாவின் மிகப்பெரிய சிங்கிள் செட் உருவானது எப்படி?

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் `ஆச்சார்யா’ நாளை வெளியாகிறது. இந்தப் படத்திற்காக இந்தியாவிலேயே அதிக பரப்பளவில் ( largest single set ) சிங்கிள் செட் அமைத்திருக்கிறார் சுரேஷ் செல்வராஜன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இதற்கு முன்பு ரஜினியின் ‘பேட்ட’, விக்ரமின் ‘இருமுகன்’ படங்களின் புரொடக்‌ஷன் டிசைனர். மகேஷ் பாபுவின் ‘பரத் அனே நேனு’வைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’, மோகன்ராஜா இயக்கி வரும் ‘மெகா ஸ்டார் 153’லும் பணியாற்றி வருகிறார். ரஜினியின் ‘எந்திரனி’ன் கலை இயக்குநராகவும் ஸ்கோர் செய்திருக்கும் சுரேஷ் செல்வராஜனிடம் பேசினேன்.

தெலுங்கு திரையுலகம் முழுவதும் ‘ஆச்சார்யா’ செட் பத்தி தான் பேசுறாங்களாமே..?

ஆச்சார்யா ஸ்பாட்டில்.. மோகன்பாபுவுடன்..

”ஆமாங்க. ரஜினி சாரின் ‘பேட்ட’யில ஒர்க் பண்ணினது இப்பவரைக்குமே கனவு மாதிரி இருக்கு. அதைப்போல சிரஞ்சீவி சார் படம் கிடைச்சதும் இன்னொரு மகுடம் சூட்டினது மாதிரி சந்தோஷமா இருக்கு. ஆச்சார்யா கதைக்காக பொல்யூசன் (Pollution) இல்லாத ஒரு ஆர்கானிக் டெம்பிள் சிட்டியை உருவாக்க வேண்டியிருந்தது. மாசற்ற சுற்றுச்சூழல் கொண்ட ஒரு நகரத்தை வடிவமைக்கறது இப்ப உள்ள சூழல்ல பெரிய சவால். பிளாஸ்டிக் கழிவுகள், பெரிய பெரிய ஹோர்டிங்ஸ், கேரி பேக்ஸ், கேபிள் ஒயர்கள், செல்போன் டவர்கள் இல்லாத நகரத்தை பார்க்கவே முடியாது. அப்படி மாசில்லாத ஒரு நகரத்தை சிங்கிள் செட்டா அமைக்கணும்னு கேட்டதும், என் மனசுல உடனே வந்து நின்னது, நான் பிறந்து வளர்ந்த சிதம்பரம்தான்.

அப்படி ஒரு கோவில் நகரைத் இப்ப செட்டா போட்டிருக்கோம். அதுவும் ஒரே செட்டா அமைச்சிருக்கோம். என் வயசையும், சினிமா அனுபவத்தையும் ஒப்பிடும்போது எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பா நினைக்கறேன். 20 ஏக்கர் பரப்பளவுல 23 கோடி செலவுல ஒரே சிங்கிள் செட்டா போட்டிருக்கோம். அதை இப்ப இந்தியாவியாவிலேயே அதிக பரப்பளவுல உள்ள சிங்கிள் செட்னு பேசுறாங்க. படத்துல உள்ல செட்கள்ல இதுவும் ஒண்ணு. இன்னொரு செட், கிழக்கு கோதாவரி நதிக்கரையில் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமம் செட். அதுவும் பேசப்படும். ஒவ்வொரு செட்டும் இப்ப டூரீஸ்ட் ஸ்பாட் மாதிரி ஆகிடுச்சு. வி.ஐ.பி.க்கள், சிரஞ்சீவி சாரின் நட்பு வட்டம்னு பலரும் வந்து பார்த்து வியக்கறாங்க. டெம்பிள் செட் பார்த்துட்டு சிரஞ்சீவி சார் செம ஹேப்பியாகிட்டார். “என்னப்பா இது செட் மாதிரியே இல்லீயப்பா. ரியல் டவுனா தெரியுது”னு ஆச்சரியமாகி என்னைக் கூப்பிட்டு போட்டோ எடுத்துக்க வச்சார். நிஜமான நகரமா இருக்கேனு சொல்லி என்னை பாராட்டிட்டு அடுத்த விநாடியே என்னோட அடுத்த படமா மோகன்ராஜா சார் இயக்கி வரும் படமும் பண்ற வாய்ப்பைக் கொடுத்தார். ‘ஆச்சார்யா’ செட் வேலைகள் நடந்துட்டு இருந்த டைம்ல ஒருநாள் மோகன்பாபு சார் வந்து செட்டை பார்த்துட்டு பாராட்டினார். சிரஞ்சீவி சாரே ‘ராஜ மௌலி சார்கிட்டேயும் இந்த செட் பத்தி பேசினார். அவர் அப்ப ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஷூட்ல இருந்தார். அவரையும் செட்டை சுத்திப் பார்க்கக் கூப்பிட்டிருக்கார். சிரஞ்சீவி சார் அவரோட சினிமா அனுபவத்துல எவ்வளவோ ஆர்ட் டைரக்டர்களை பார்த்திருப்பார். ஆனா, என்னோட ஒர்க் அவருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. என்னை அவரோட ட்விட்டர் பக்கத்துலகூட எழுதினது சர்ப்ரைஸா இருந்துச்சு. இந்தப் படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம்சரணும் `ஆர்.ஆர்.ஆர்.’ படப்பிடிப்பு இடைவெளியில் ஒருநாள் வந்து செட்டை சுத்திப்பார்த்து சந்தோஷப்பட்டார்”

‘இருமுகன்’ செட்டில்..

இந்தியிலும் பிஸியா ஒர்க் பண்றீங்க… எப்படி இருக்கு பாலிவுட்?

”ஷாருக்கானோட ‘ஓம் சாந்தி ஓம்’ல உதவியாளரா ஒர்க் பண்ணும்போது, எனக்கு இந்தி தெரியாது. இங்கிலீஷும் அவ்ளோவா பேச வராது. ஏன்னா சிதம்பரம்ல தமிழ் மீடியம்தான் படிச்சேன். ஸோ, இந்தி படங்கள்ல வேலை கத்துக்கிட்டு பிறகு தமிழ்ல ஒர்க் பண்ணிக்கலாம்னுதான் அப்ப மைண்ட்ல ஓடுச்சு. அப்புறம் ஒரு சவாலா எடுத்துட்டு இந்தியில் ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கு முதல் பட வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இந்தியில் என் முதல் படமே 100 கோடி ரூபாய் புராஜெக்ட். அக்‌ஷய்குமார், சித்தார்த் மல்ஹோத்ரா நடிச்ச ‘பிரதர்ஸ்’ படம் அது. அந்தப் பட வாய்ப்பு மொதல்ல சாபு சார்கிட்டதான் போச்சு. அவர்தான் ‘நான் எப்படி ஒர்க் பண்ணுவேனோ, அதேமாதிரி சுரேஷ் ஒர்க்கும் இருக்கும்’னு சொல்லி என்னை புரொடக்‌ஷன் டிசைனராக்கினார். ‘கஹானி’ இயக்குநர் சுஜாய் கோஷின் ‘டைப் ரைட்டர்’ வெப் சீரிஸ்ல ஒரு பழங்கால வீடு ஒண்ணு செட் போட்டிருதேன். ‘அந்த வீடு எங்கே இருக்கு?’ ஷூட்டுக்கு தேவைப்படுது’னு ஹாலிவுட்ல இருந்து ஏகப்பட்ட போன்கால்ஸ் வந்ததா தன் ட்விட்டர் பக்கத்துல சுஜாய் கோஷ் குறிப்பிட்டு என்னை கௌரவப்படுத்தினார். இப்ப தெலுங்கு ‘ஆலவைகுண்டபுரமலு’ படத்தின் இந்தி ரீமேக் வேலைகளும் போயிட்டு இருக்கு. கார்த்திக் ஆர்யன் ஹீரோவா பண்றார். போன வாரம், அமிதாப் சாரை வச்சு ‘பா’ இயக்கிய பால்கி சார் என்னைக் கூப்பிட்டு அவரோட அடுத்த படத்துல ஒர்க் பண்ணக் கேட்டார். பண்ண முடியாமல் போச்சு. ஹிர்த்திக் ரோஷனின் பர்சனல் டிசைனராகவும் இருக்கேன். சமீபத்துல சல்மான்கானுக்கு 3டி டெக்னாலஜியோட அவரது முகத்தை வச்சு, ஒரு மாஸ்க் பண்ணிக் கொடுத்தேன்.

நான் அடிப்படையில இருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததால, சில நல்ல வாய்ப்புகள் வரும் போது ‘நோ’ சொல்லறதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. அதையும் மீறி அவரோட ஒர்க் பண்ண முடியாம வேற படங்கள்ல பிஸியாகிட்டேன். தமிழ்நாட்டுல ஒரு சின்ன ஊர்ல பிறந்தேன். எனக்கு ஒரு சின்ன கனவு இருந்துச்சு. எங்க அப்பா அம்மாவால அந்த கனவு தூண்டப்பட்டுச்சு. நான் ஒரு ஸ்டேட்டுக்கான ஆர்ட் டைரக்டராக மட்டுமில்லாம, மிகப்பெரிய பிசினஸ் பண்ற மூன்று வர்த்தக மொழிகள்ல படங்கள் பண்றது பெருமையாவும், சந்தோஷமாகவும் இருக்கு. இதுக்கெல்லாம் காரணமான என் குரு சாபு சிரில் சாருக்கும் என் அப்பா, அம்மாவுக்குமே நன்றி கடன்பட்டிருக்கேன்..”

கோவில் செட் வேலையின் போது..

கலை இயக்குநர், புரொடக்‌ஷன் டிசைனராக நீங்க இந்த துறைக்குள் வந்தது எப்படி?

”என்னோட சொந்த ஊர் சிதம்பரம். எங்க அப்பா, சிதம்பரம் நகராட்சியில பில் கலெக்டரா பணியாற்றியவர். சின்ன வயசில இருந்தே ஓவியங்கள் வரைவேன். நான் ஏழாவது படிக்கும்போது டி.வி.யில ‘கலைஞர் பவள விழா’ ஓடிக்கிட்டு இருந்தது. அப்ப தோட்டாத்தரணி சாரை மேடைக்கு அழைத்து, ‘இவ்ளோ பெரிய செட்டை ரெண்டு நாள்ல அமைச்சு கொடுத்தார்’னு சொல்லி பாராட்டினாங்க. ஒரு ஓவியனுக்கு இவ்ளோ பெரிய மேடையானு எனக்கு ஆச்சரியம் ஆகிடுச்சு. எனக்குள் ஆர்ட் டைரக்‌ஷன் மேல ஈடும்பாடும் வந்திடுச்சு. நான் ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவுல சாதிகணும்னு விதை விழுந்திடுச்சு. அப்புறம் பாண்டிச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம்ல ஆர்ட்ஸில் சேர்ந்தேன். அங்கே ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஷூட்டில் சாபுசிரில் சாரை போய் பார்த்து அவர்கிட்ட அசிஸ்டென்ட் சான்ஸ் கேட்டேன். ‘படிப்பு முடிச்சிட்டு வந்து பாருங்க’ன்னார். அதேபோல என்னை சேர்த்துக்கிட்டார். ஒன்பது வருஷத்துல எல்லா மொழிப்படங்களுமாக 20 படங்கள் ஒர்க் பண்ணினேன். அவரால தான் நான் மும்பைக்கும் போனேன். ‘ஓம் சாந்தி ஓம்’ உள்பட பல பெரிய படங்கள் ஒர்க் பண்ணினேன். நான் ஸ்கூல்ல இருந்து எப்படி வரணும்னு விரும்பினேனோ அப்படியே நான் வளர்ந்துட்டே வந்தது எனக்கு இன்னைக்கு வரை ஆச்சரியமாகவே இருக்கு. தமிழ்ல முதன்முதல்ல நான் கலை இயக்குநராக அறிமுகமானது ரவி.கே.சந்திரன் சாரோட ‘யான்’. ‘இருமுகன்’ல தயாரிப்பு வடிவமைப்பாளரா உயர்ந்தேன். மகேஷ் பாபு சார் ரொம்ப அமைதியானவர். ‘பரத் அனே நேனு’வில் சட்டசபை செட் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போச்சு. அந்த செட் ஒரு ரியல் அசம்பிளியா இருக்குனு மகேஷ் பாபு சார் பாராட்டினதோடு ஒரு காஸ்ட்லியான ஐபேடையும் பரிசளிச்சார். என்னோட ஆரம்பகால வளர்ச்சிக்கு சாபு சாரும், ரவி.கே.சந்திரன் சாரும் அவ்ளோ உதவினாங்க.”

படப்பிடிப்பின் போது..

புரொடக்‌ஷன் டிசைனர் – ஆர்ட் டைரக்டர் – ஸ்பெஷல் பிராப்பர்ட்டி டிசைனர்… இதுல உள்ள வித்தியாசம் என்ன?

“தமிழ்நாட்டுல இவ்வளவு நாள் புரொடக்‌ஷன் டிசைனராகத்தான் இருந்திருக்கோம். ஆனா, அதுக்கு ஆர்ட் டைரக்டர்னு பெயர் வச்சிட்டோம். பொதுவா கலை இயக்குநர்கள் ஒரே நேரத்துல ஒரே ஸ்டேட்ல இருந்தா அஞ்சாறு படங்கள் ஒர்க் பண்ண முடியும்.

இந்த கேள்விக்கு கொஞ்சம் விரிவாகவே சொல்றேன். ஹாலிவுட்ல நூறு டிபார்ட்மென்ட் இருக்குனா நூறு பேர் வேலை செய்வாங்க. பாலிவுட்ல நூறு டிபார்ட்மென்ட்டுக்கு எண்பது பேர்கிட்ட ஒர்க் பண்ணுவாங்க. ஆந்திரா, தமிழ்நாட்டுக்கு வந்தா, நூறு டிபார்ட்மென்ட்டுக்கு 50 பேர்தான் வேலை செய்வாங்க. கேரளால இன்னும் குறையும். அங்க மல்டி டாஸ்க்கிங். புரொடக்‌ஷன் டிசைனர், ஆர்ட் டைரக்டர், செட் டிரஸ்ஸர், செட் சூப்பர்வைசர்னு எல்லாத்தையும் ஒருத்தரே பண்ண வாய்ப்பிருக்கு. போர்க்களக் காட்சிகள் அதிகம் உள்ள ‘பாகுபலி’ மாதிரி படங்களுக்கு சாபு சிரில் சார்தான் வாள், கேடயம்னு போர் ஆயூதங்களுக்கான டிசைன் பண்ணியிருப்பார்.

ஹாலிவுட் ‘கிளாடியேட்டர்’ல வில், அம்பு, கத்தி பண்றவங்க தனி டிபார்ட்மென்ட். மினியேச்சர் தனி டிபார்ட்மென்ட். இந்தியாவுல குறிப்பா தென்னிந்திய சினிமாவுல ஒரு கலை இயக்குநர் தன் தோள்மேல நிறைய வேலைகளை தூக்கிப்போட்டுக்கிறார். மினியேச்சர் பண்ணணும், பிராப்பர்ட்டீஸ் டிசைன் பண்ணணும், ஆர்ட் டைரக்‌ஷனும் பண்ணணும். அதனாலதான் மும்பைல ப்ளானிங் கரெக்ட்டா இருக்குதுனு சொல்றோம். இந்திப் படங்கள்ல தனித்தனி டிபார்ட்மென்ட் இருக்கு. சென்னைல அந்த ஒர்க்கை கார்ப்பென்டரோ, பெயின்டரோ பகிர்ந்துக்கறாங்க. புரொடக்‌ஷன் டிசைனர்னா முழுப்படத்தையும் வடிவமைக்கிறவர். அந்தப் படத்தோட ஃப்ளேவர், டோன், காஸ்ட்யூம் கலர்ஸ் எல்லாமே டிசைன் பண்றார். ஆர்ட் டைரக்டர்னா, அவர் சிவில் என்ஜினியர் மாதிரி. டெக்னிக்கலா கட்டுமானம் பண்றவர்னுகூட சொல்லலாம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.