பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு

Dharumapuram Aadheenam says CM Stalin gives verbal permission to Pattina Pravesham: பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்மொழி அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் காலங்காலமாக, நடைபெற்று வரும் மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க ஆதீனங்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முதல்வருடனான சந்திப்பின் போது, தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி இந்த ஆண்டு சுமூகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தோம். ஆதீனமும், ஆன்மிக உள்ளங்களும் எந்தநிலையிலும் கவலைப்படாமல் இருப்பதற்கான ஆறுதலை முதல்வர் தெரிவித்து இருக்கிறார். வரும் காலங்களில் இதில் எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் மனிதநேயத்துக்கு குந்தகம் ஏற்படாமல் எப்படி சுமுகமாக தீர்வு காணலாம் என்பதை ஆதீனங்கள் கலந்து பேசி தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்துடன் பேசி தீர்வு காண்போம். இந்த ஆண்டு மரபுபடி அனைத்து நிகழ்வும் நடைபெறுவதற்கு, விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் வாக்களித்துள்ளார் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டம்; ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க தமிழக அரசு திட்டம்

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியதாக கூறினார். பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார், விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் ஆதீனம் கூறினார்.

இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.