`கைகளைத் தொட்டுச் செல்லும் மேகங்கள், இயற்கை எழில் கொஞ்சும் சிங்கப்பாறை!' – கொழுக்குமலை ட்ரிப் டைரி

உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு சென்று இறங்கியபோது மணி நண்பகல் 12 ஆகியிருந்தது. கொழுக்குமலைக்குச் செல்வதே என் பயணத்திட்டமாக இருந்தது. இதற்கு முன்பு மூன்று முறை மூணாறுக்குச் சென்றிருந்தாலும் மாட்டுப்பட்டி அணை, டாப் ஸ்டேஷன் ஆகியவற்றுக்குத்தான் சென்றிருக்கிறேனே தவிர கொழுக்குமலைக்குச் சென்றதில்லை. `கொழுக்குமலைக்குச் செல்ல வேண்டுமென்றால் பொழுது புலர்வதற்கு முன்பே நாம் கொழுக்குமலையில் இருக்க வேண்டும், கைக்கெட்டும் தொலைவில் மேகக்கூட்டம் திரண்டு நிற்கும் அதிகாலைப்பொழுதில் சூரிய உதயத்தைக் காண்பது பேரற்புதமாக இருக்கும்’ என்று சொல்லியிருந்தனர்.

காலை உணவை முடித்து விட்டுத்தான் நான் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறுக்குப் பேருந்து ஏறினேன் என்பதால் அன்றைய தினம் கொழுக்குமலைப் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்பது உறுதிபடத் தெரிந்தது. தொடர் பயணங்களால் சற்றுக் களைப்பாகவும் உணர்ந்ததால் மூணாறில் எங்காவது விடுதி எடுத்துத் தங்கிவிட்டு, அடுத்த நாள் அதிகாலை கொழுக்குமலைக்குக் கிளம்பிவிடலாம் என்று யோசித்தேன்.

கொழுக்குமலை

நான் ஓர் தனிப் பயணி என்பதோடு குறைந்த செலவில் பயணம் மேற்கொள்கிறவன். மூணாறிலிருந்து கொழுக்குமலை செல்ல வேண்டுமென்றால் தேனி செல்லும் பேருந்து ஏறி `பவர் ஹவுஸ்’ பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து சூர்யநெல்லி எனும் குறுநகருக்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும். சூர்யநெல்லி யிலிருந்துதான் கொழுக்குமலை செல்வதற்கான ஜீப்புகள் கிளம்பும் என்பதை மூணாறிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரைப் பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டுமென்றால் ஆட்டோ ஓட்டுநர்கள்தான் என் முதல் தேர்வு. ஆனால், தப்பித்தவறிக்கூட ஏதாவது நல்ல லாட்ஜ் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்க மாட்டேன்.
சூர்யநெல்லியிலும் தங்கும் விடுதிகள் உண்டு என அவர்கள் கூறினர். மூணாறிலிருந்து அதிகாலையில் சூர்யநெல்லி கிளம்பி அங்கிருந்து கொழுக்குமலைக்குச் செல்வதைக்காட்டிலும் சூர்யநெல்லியில் தங்கி விடுவது நல்லது என்று தோன்றியது. இருந்தும், சூர்யநெல்லியோ குறுநகரம். அங்கு பெரிய ரிசார்டுகள் இருக்கலாம். ஆனால், குறைந்த வாடகையில் தங்கும் விடுதி இருக்குமா என்பது கேள்விக்குள்ளாகவே ,சற்றுக் குழப்பமடைந்தேன். இறுதியாக மூணாறிலேயே தங்கிவிடுவது என முடிவெடுத்தேன்.

இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். எல்லா ஊரிலும் குறைந்த வாடகையில் விடுதி கிடைக்கும். அதைத் தேடிக் கண்டடைவதுதான் சவால். அந்த அறை சுகாதாரமாக இருக்கிறதா என்று பார்த்தால் போதும். அதைத் தாண்டி அதிக வசதிகளை எதிர்பார்க்கக் கூடாது. ஏனென்றால் பயணம் மேற்கொள்கிற இடத்தில் நாம் அறை எடுப்பது நம் பொருள்களை வைப்பதற்கும், இரவு படுத்துறங்குவதற்கும் மட்டுமே. அங்கே நாம் குடித்தனம் நடத்தப்போவதில்லை. சில விடுதிகளில் தொலைக்காட்சி உள்ள அறைக்கு ஒரு வாடகையும், தொலைக்காட்சி இல்லாத அறைக்கு ஒரு வாடகையும் நிர்ணயம் செய்து வைத்திருப்பர். ஊர் சுற்ற வந்த இடத்தில் தொலைக்காட்சி தேவையற்றது என்பதால் தொலைக்காட்சி இல்லாத அறையைத் தேர்வு செய்து 50 – 100 ரூபாயை மிச்சப்படுத்திக்கொள்வேன்.

குடும்பத்துடன் செல்பவர்களுக்கும், காதலர்கள் மற்றும் தம்பதியருக்கும் நான் சொல்வது பொருந்தாது. அவர்களால் ஒரு நகரத்துக்குச் சென்று குறைந்த வாடகைக்கு ஒவ்வொரு லாட்ஜாக ஏறி இறங்கிக்கொண்டிருக்க முடியாது. தனிப் பயணியாக குறைந்த செலவில் ஊர் சுற்ற விரும்புபவர்கள் நான் சொன்னவற்றை மேற்கொள்ளலாம். எப்போதும், பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே விடுதியைத் தேடுவேன். அங்குதான் குறைந்த விலையிலான விடுதிகள் கிடைக்கும் என்பதோடு, போக்குவரத்துக்கும் சற்று வசதியாக இருக்கும்.

கொழுக்குமலை

மூணாறில் இறங்கியதும் முதலில் ஓர் விடுதியில் சென்று விசாரித்தேன். 600 ரூபாய் வாடகை சொன்னார்கள். மூணாறிலேயே மிகக்குறைந்த வாடகை வசூலிக்கும் விடுதி இதுதான் என்றும் சொன்னார்கள். அந்த வாடகை என் பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லை என்று சொல்லிவிட்டு வேறு தேடலாம் என்று இறங்கினேன். கொஞ்ச தூரம் சென்றதும் அடகுக்கடை ஒன்றில் Rooms available என்று எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்தவரிடம் விசாரித்தபோது அவரும் 600 ரூபாய் சொன்னார். தனியாள் என்பதால் குறைத்துக் கூறும்படி கேட்ட பிறகு 500 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். சீஸனில் இந்த அறையின் வாடகை 1,500 ரூபாய் என்றும் தற்போது சீஸன் இல்லாததால் 500 ரூபாய்க்குத் தருவதாகவும் கூறினார்.

அந்த அறையைப் பார்த்தபோதுதான் அவர் சொன்னதன் அர்த்தம் தெரிந்தது. இருவர் படுத்துறங்கும் கட்டில், மிருதுவான மெத்தையின் மேல் கம்பளிப்போர்வையை அழகாக மடித்து வைத்திருந்தார்கள். பார்த்ததுமே அந்தக் கம்பளிப் போர்வைக்குள் புதைந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. LED TV, மரத்தாலான அடுக்களை, ஆளுயரக் கண்ணாடி கொண்ட உடை அலங்காரம் செய்யும் மேசை என சகல வசதிகளும் கூடிய அந்த அறை, சீஸன் இல்லாதபோது போனதால்தான் 500 ரூபாய் வாடகைக்குக் கிடைத்தது. சீஸன் இல்லாத நாள்களில் பயணம் செய்வதில் கிடைக்கப்பெறும் பல நன்மைகளில் இதுவும் ஒன்று.

மதிய உணவை முடித்துவிட்டு தூங்கியவன் 8 மணிக்குதான் எழுந்தேன். இரவு என்பது கொண்டாட்டத்துக்கானது. பலருக்கும் அப்படித்தான். நிலக்காட்சிகளை, தொல்லியல் தலங்களைக் காண்பதற்கு பகல்தான் உகந்தது. அதுவே, ஒரு நகரத்தின் அழகை முழுமையாக ரசிக்க வேண்டுமெனில் அதற்கு இரவு அதி அற்புதமானது. சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல, அனைத்து நகரங்களுக்கும் இது பொருந்தும். நான் எந்த நகருக்குச் சென்றாலும் இரவில் காலார நடந்து அந்நகரைச் சுற்றி வருவேன். பல விதமான கடைகள் மற்றும் மக்கள் திரளை இரவில் காண முடியும். பகல் பொழுதின் சோர்வுகளை உதறி இரவில் அந்நகரம் புத்துணர்ச்சியோடு இயங்குவதைப் போன்று எனக்குத் தோன்றும். மூணாறு மிகச்சிறிய நகரம். 16 டிகிரி குளிரில் இரவு 10 மணி வரை அச்சிறு நகரத்தை வலம் வந்தேன்.

அடுத்த நாள் காலை எழுந்தபோது மணி 7-ஐ கடந்துவிட்டது. கொழுக்குமலையில் சூரிய உதயத்தைக் காணும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன். இருந்தாலும் சரி என்று குளித்து முடித்து விட்டு அறையைக் காலி செய்துவிட்டு சூர்யநெல்லிக்குக் கிளம்பினேன். மூணாறு – தேனி பேருந்தில் பவர் ஹவுஸ் நிறுத்தத்துக்கு 16 ரூபாய் பயணக் கட்டணம். அங்கிருந்து சூர்யநெல்லிக்கு ஷேர் ஆட்டோவில் 30 ரூபாய் கொடுத்துச் சென்ற போது மணி 10 ஆகியிருந்தது.

சூர்யநெல்லியிலிருந்து கொழுக்குமலைக்குச் செல்ல வேண்டுமென்றால் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஜீப்களுக்கு மட்டுமே அனுமதி. ஒரு ஜீப்பில் 6 பேர் வரை பயணம் செய்ய அனுமதிக்கப் பட்டிருக்கிறது. ஜீப்பின் வாடகை 2,000 ரூபாய். அத்தொகையில் 300 ரூபாய் நுழைவுக்கட்டணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, 1700 ரூபாய் ஜீப் டிரைவருக்கு வழங்கப்படும்.

சூர்யநெல்லியில் இருக்கும் இடுக்கி மாவட்ட சுற்றுலாத்துறையின் பதிவு அலுவலகத்தில் தரப்படும் விண்ணப்பத்தில் நமது பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை எழுதி பூர்த்தி செய்த பிறகுதான் செல்ல முடியும். குழுவாக வருகிறவர்கள் 2,000 ரூபாய்க்கு ஜீப் எடுத்துக்கொள்வது பெரும் செலவாக இருக்காது. இதுவே என்னைப் போன்ற தனிப் பயணியருக்கு அது சாத்தியமில்லை. நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்து 2,000 ரூபாயை சரியாகப் பங்கிட்டுக்கொண்டு ஜீப் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நான் சென்ற 10 மணிக்கு அதற்கான சாத்தியங்களும் குறைவாகவே இருந்தது.

கொழுக்குமலை

அங்குள்ள பதிவு அலுவலகத்திலும் ஜீப் ஓட்டுநர்களிடமும் ஷேரிங்கில் கொழுக்குமலைக்குச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். நிச்சயம் ஏதாவது வண்டி வரும் என அவர்கள் காத்திருக்கச் சொன்னார்கள். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். சூர்யநெல்லியிலிருந்து கொழுக்குமலைக்கு 150-க்கும் அதிகமான ஜீப்கள் செல்வதாகத் தெரிவித்தனர். கொழுக்குமலை காட்சி முனையிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதுதான் சிறப்பு என்பதால் அதிகாலை 04.30 – 05.30 மணிக்கெல்லாம் முதல் சுற்று கிளம்பிவிடுகிறது. அப்பயணிகள் 08.30 மணிக்கு மீண்டும் சூர்யநெல்லிக்குக் கொண்டு வந்து விடப்படுவார்கள். சீஸன் நாள்களில் 150 ஜீப்களுக்கும் மேலாகச் செல்லும் நிலையில் மற்ற நாள்களில் சராசரியாக 60 ஜீப்கள் வரை செல்கின்றன என்பது போன்ற தகவல்களைக் கேட்டறிந்தேன்.

அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் ஷேரிங்குக்கு எனக்கு ஜீப் கிடைத்தது. ஓட்டுநருக்கு அருகே முன்பக்க சீட் கிடைப்பதெல்லாம் வரம். கேரளத் தம்பதியர் தன் குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் 1,500 ரூபாய் கொடுக்க நான் 500 ரூபாய் கொடுத்து அந்த ஜீப்பை பகிர்ந்துகொண்டோம். சூர்யநெல்லியிலிருந்து கொழுக்குமலை 12 கிலோமீட்டர் தொலைவு. தேயிலைத் தோட்டங்களாக நிறைந்திருக்கும் அம்மலைப் பாதையில் முதல் நான்கு கிலோமீட்டருக்கு தார்ச்சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாகத்தான் இருக்கும் என்று ஓட்டுநர் காமேஷ் சொன்னார். நான் `ஓ’ என்றபடி அவரைப் பார்த்தேன். மீதமுள்ள 8 கிலோ மீட்டர் இதை விட மோசமாக இருக்கும், ஏனென்றால் அதற்கு மேல் சாலையே கிடையாது என்றார்.

கொழுக்குமலையைச் சென்றடைய எப்படியும் 12 மணி ஆகிவிடும் என்கிற நிலையில் பயணம் தொடர்ந்தது. சூர்யநெல்லியில் ஜீப் ஓட்டுநர்கள் அதிகாலை சூரிய உதயத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை என்னிடம் காட்டினர். செக்கச் சிவந்த வானில் சூரியன் உதிக்கிற கணத்தையும் நாம் தீண்டும் தொலைவில் திரண்டு நிற்கும் மேகங்களையும் மனதில் நிறுத்திப் பார்த்தேன். அந்த அதிகாலைப் பயணத்தைத் தவற விட்டுவிட்டேன் என்பது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆனால், ஓர் பயணி அதற்காக கலங்கி விடக்கூடாது. ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியை நோக்கி 2017-ம் ஆண்டு ஜனவரியில் பயணம் மேற்கொண்டேன். அங்குள்ள ஷோலாங் வேலி பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது. ஆனால், நான் சென்றபோது மைனஸ் 4 டிகிரிக்கு குளிர் இருந்ததே தவிர பனிப்பொழிவு இல்லை. ஷோலாங் வேலி காய்ந்த புற்களாலான நிலத்திட்டாகக் காட்சியளித்தது. பனித்தூறலில் நனைய மீண்டும் வராமலா போய்விடுவேன் என்று என்னை தேற்றிக்கொண்டேன். அதையேதான் இப்பயணத்திலும் செய்தேன்.

நான்கு கிலோ மீட்டரைக் கடந்ததும் ஓட்டுநர் காமேஷ், செல்போன், பர்ஸ் ஆகியவற்றைப் பாதுகாப்போடு வைத்துக் கொள்ளச் சொன்னார். சீரற்ற பாதையில் ஜீப் குலுங்கிக் குலுங்கிச் செல்லும் என்பதால் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்தார். கொஞ்ச தூரம் போனதும் தேயிலைத் தோட்டத்துக்கு நடுவே இரும்பாலான வாட்ச் டவர் இருந்தது. அதன் மேல் ஏறிநின்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று ஓட்டுநர் காமேஷ் சொன்னார். நானும், கேரளத் தம்பதியரும் இறங்கி வாட்ச் டவருக்குச் சென்றோம். அதிக உயரமில்லை என்றாலும் வாட்ச் டவர் மேலேறியதும் பலமாகக் குளிர்க்காற்று வீசியது. எந்தக் குளிரைப் பருக வந்தேனோ அக்குளிர். செல்போனைக் கொண்டு வீடியோ எடுத்தேன் கை விரைக்க ஆரம்பித்தது. அத்தம்பதியருக்கு வழிகொடுக்கும் விதமாய் கீழே இறங்கினேன். அங்கிருந்து பார்க்கையில் மலைத்தொடர் வரிசையாக நீண்டிருந்தது. அவற்றுள் கொழுக்கு மலை எது என்று காமேஷிடம் கேட்டேன். கொழுக்குமலையை சுட்டிக்காட்டியவர் அதை அடுத்து இருப்பது மீசப்புலி மலை என்றார். ஜீப் கொழுக்குமலை அடிவாரம் வரை செல்லும் கொழுக்கு மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டுமென்றால் மலையேற்றம் மூலமாகத்தான் செல்ல முடியும் என்றார்.

கொழுக்குமலைக்கு நாம் கேரளா வழியாகத்தான் செல்ல முடியும் என்றாலும் அது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுக்காவுக்குட்பட்டது. போடிமெட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில்தான் சூர்யநெல்லி இருக்கிறது. தேனியிலிருந்து வருகிறவர்கள் போடிமெட்டு வழியாகவும் வரலாம். எப்படி வந்தாலும் சூர்யநெல்லிதான் கொழுக்குமலையின் நுழைவுவாயில். கொழுக்கு மலையில் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள பழைமையான தேயிலை தொழிற்சாலை இருக்கிறது. அதற்கு நுழைவுக்கட்டணம் மட்டுமே 900 ரூபாய் செலுத்த வேண்டும் என்பதால் பெரும்பாலனவர்கள் அங்கு செல்வதில்லை.

சிங்கப்பாறை

இட வலமாய் குலுங்கிச் சென்ற ஜீப் கொழுக்குமலை அடிவாரத்தில் நின்றது. அதுதான் ஜீப் செல்வதற்கான விளிம்பு. அச்சமதளத்திலிருந்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் மலை உச்சிக்குச் செல்ல வேண்டுமென்றால் மலையேற்றம்தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால், 2016 மீட்டர் உயரத்திலுள்ள கொழுக்குமலை அடிவாரத்தில்தான் அற்புதமான காட்சிமுனை இருக்கிறது. சிங்கப்பாறை என்று சொல்லப்படக்கூடிய பாறை ஒன்று அந்த இடத்தின் அடையாளமாக நின்றிருக்கிறது. ஜீப் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவு நடந்தால் சிங்கப்பாறையை அடைந்து விடலாம். செல்கிற வழியில் குளிரை நன்றாகவே உணர முடிந்தது. நேரம் தவறி வந்துவிட்டோமே என்கிற எனது ஏமாற்றத்தைப் போக்கும் விதமாக சூரியனை மேகங்கள் சூழ்ந்து பனி படரத் தொடங்கியது. நான் சிங்கப்பாறைக்குச் சென்று பார்த்தேன். அப்பாறைக்கு ஏன் சிங்கப்பாறை எனப்பெயரிட்டார்கள் எனத்தெரியவில்லை. எனக்கு அந்தப் பாறையைப் பார்க்கையில் சிறுத்தையின் தலையைப் போன்றுதான் இருந்தது.

அக்காட்சி முனையில் நின்று பார்க்கையில் குரங்கணி, மூணாறு டாப் ஸ்டேஷன், போடி மெட்டு ஆகியவற்றைப் பார்க்கலாம். எதிரே தெரிந்த மலையைத் தழுவியடிபடி பனி மூட்டம் நகர்ந்து வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்துக்குப் பின்பு அப்பனிமூட்டம் நான் நின்றிருந்த சிங்கப்பாறையை சூழத்தொடங்கியது. சுற்றியிருக்கும் மலைகள், கீழே தெரியும் நிலப்பரப்பு ஆகியவற்றை பனிமூட்டம் தெளிவற்ற காட்சிகளாக்கி விட்டிருந்தது. என்னுடன் வந்த கேரளத் தம்பதியர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சிறிது நேரத்தில் ஜீப்புக்குத் திரும்பினர். புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்த பிறகு, நான் சிங்கப்பாறையையொட்டியிருந்த கோரைப்புற்பரப்பில் சிறிது நேரம் உட்கார்ந்தேன். குளிரை கிரகித்துக்கொண்டு என் முன் விரிந்திருந்த பனிபடர்ந்த நிலக்காட்சிகளையும், மலைகளின் வனப்பையும் பார்த்தபடி அமைதியாக இருந்தேன். இயற்கை எனும் பேரற்புதத்தின் முன்பு நாம் ஏதுமற்று அடங்கி ஒடுங்கும் கணம் அது. கண்டு திளைப்பதைத் தவிர வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை. இப்படியே அமைதியாக நீண்டநேரம் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. சென்றாக வேண்டிய கட்டாயத்தில் எழவே மனமின்றி எழுந்தேன். திரும்பி வருகிற வழியில் இடையிடையே நின்று திரும்பிப் பார்த்து பெருமூச்சு விட்டேன். நண்பகல் 12 மணிக்குச் சென்றாலும் நிறைவான பயண அனுபவத்துடன் மீண்டும் சூர்யநெல்லியை வந்தடைந்தேன். அடுத்தமுறை நிச்சயம் அதிகாலைப் பயணத்தை மேற்கொண்டே தீருவேன் என உறுதியெடுத்துக் கொண்டு ஊர் திரும்பினேன்.

கொழுக்குமலை

பயணிகளுக்கான குறிப்பு

கொழுக்குமலைக்குச் செல்லும் திட்டத்தோடு வருகிறவர்கள் அதிகாலை 04.30 – 05.00 மணிக்கெல்லாம் சூர்ய நெல்லியை அடைந்து விட வேண்டும். அப்படி இல்லையென்றால் முந்தைய நாளே சூர்யநெல்லியில் வந்து தங்கிவிடாலாம்.
சூர்யநெல்லியில் அனைத்து விதமானவர்களுக்கும் தங்கும் விடுதி இருக்கிறது. தனிப்பயணிகளுக்கு குறைந்த வாடகையிலான விடுதிகளும் உண்டு.

கொழுக்குமலையில் இரண்டு கேம்பிங் இடங்கள் உண்டு. நபர் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வீதம் வசூல் செய்து கொழுக்குமலைக்குக் கூட்டி வந்து விடுவார்கள். அங்கு டெண்ட் போட்டு ஓர் இரவு தங்கலாம். இரவு உணவு மற்றும் அடுத்த நாள் காலைக்கான உணவு வழங்கப்படும். காலையில் கொழுக்கு மலையேற்றத்துக்கு கூட்டிச் செல்லப்படுவார்கள். ஆன்லைன் மூலம் இதைப் பதிவு செய்துகொள்ளலாம்.

குரங்கணி தீ விபத்துக்குப் பிறகு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கொழுக்குமலையை ஒட்டியிருக்கும் மீசைப்புலி மலைக்குச் செல்லும் பயணத்தை கேரள சுற்றுலாத்துறையே ஒருங்கிணைக்கிறது. முன்கூட்டியே பதிவு செய்து பயணிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.