‘அதிமுக 10 வருடத்தில் செய்ததை திமுக ஒரே வருடத்தில்..’ – அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்

”ஓராண்டு திமுக ஆட்சியில் 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மேலூர் திருவுடையம்மன் கோயில், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசியவர், “தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 2666 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 3400 கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே மீட்டகப்பட்டது.
வரலாற்றில் குப்தர் ஆட்சி, மௌரியர்கள் ஆட்சி என்பதை போல அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொற்காலம். தமிழ்நாட்டில் இந்தாண்டு 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 கோவில்களின் புணரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. 1000 ஆண்டுகள் பழமையான 80 கோவில்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட உள்ளது. பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் திருக்கோயிலின் கும்பாபிஷேக நாள் இறுதி செய்யப்பட்டு வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
image
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 8 கோடி மதிப்பில் தங்கத்தேர் பணிகளும், 150 கோடி மதிப்பில் கோயில் திருப்பணிகளும் நடைபெற உள்ளது. தவறுகளுக்கு இடம் தராமல் சிறப்பாக பணிகள் நடைபெற்று வரும் கோயில்களின் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடாது. சட்டவிதிகளை மீறி கோயில்களை தவறாக பயன்படுத்தினால் மட்டுமே அறநிலையத்துறை தலையிடும். சிதம்பரம் நடராஜர் கோ‌யிலில் கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்வதற்கான கடிதத்தை ஏற்க மறுத்த நிலையில் பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பட்டுள்ளது. வரவு – செலவு, கோயில் சொத்துக்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து குழு ஆய்வு மேற்கொள்ளும். அரசியல் செய்ய ஏதாவது தேவை என்பதால் சிலர் இறைவனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வருகின்றனர்” என்றுக் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.