சீனர்களுக்கு முறைகேடான வகையில் விசா பெற்று தந்த விவகாரம்: டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு

டெல்லி: டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றது. 269 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா  வழங்க ரூ.50 லட்சம் பெற்றதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில் சுமார் 7 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவு பெற்றது. ஆனால் சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நீடிக்கிறது. இந்நிலையில் சோதனை தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்; முறைகேடாக விசா வழங்கியது தொடர்பாக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 6 நகரங்களில் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் மான்சாவில் உள்ள அனல்மின் நிலையத்தில் பணியாற்ற சீன நாட்டினரை அழைத்து வந்த போது விசா வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளது. உள்துறை அமைச்சகம் அனுமதித்த அளவை விட அதிகமான சீன நாட்டினருக்கு அனல் மின் நிலையத்தில் பணியாற்ற விசா வழங்கப்பட்டுள்ளது. வேறு காரணங்களைக் கூறி சீன நாட்டினருக்கு விசா பெறப்பட்டது. ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டவர் மட்டுமே பணியார வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. முறைகேடாக விசா பெறுவதற்கு சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவியுள்ளார். சீன நாட்டினர் 263 பேருக்கு பணி விசா வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விசாக்களும் ஒரே மாதத்திற்குள் வழங்கப்பட்டுள்ளன. சீன நாட்டினருக்கு முறைகேடாக விசா வழங்கியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.