'சீனர்களுக்கு விசா வாங்கித் தர ரூ. 50 லட்சம் லஞ்சம்' -கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு

சீனாவை சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கு விசா வாங்கித் தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வாங்கித் தந்ததற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக புதிய வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, மும்பை, ஒடிஸா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
image
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பைகிராஸ் சாலையில் உள்ள ப. சிதம்பரத்தின் இல்லம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் 14 பேர் கொண்ட இரண்டு சிபிஐ அதிகாரிகள் குழு தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்தது.
டெல்லியில் உள்ள பார்ட்ஸ் நம்பர் தனி வீடு மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ப. சிதம்பரம் தற்போது ராஜஸ்தானில் உள்ளார். கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருக்கிறார். ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மட்டும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருக்கிறார்.
image
கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை பெற ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதேபோல, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும் அவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.