அசாம், அருணாச்சலில் வெள்ளம் நிலச்சரிவால் 11 பேர் உயிரிழப்பு: சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு

குவாஹாட்டி: வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேரை காணவில்லை.

அருணாச்சலப் பிரதேச தலைநகர், இட்டா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் கடந்த 15-ம் தேதி இரவு முதல் 5 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். அங்கு மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் , மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட பல அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 6 பேரை காப்பாற்றினர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அருணாச்சல முதல்வர் பீம கந்து இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்களையும் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அசாம் மாநிலம் வெள்ளத்தில் சிக்கி இருவரும், நிலச்சரிவில் சிக்கி 4 பேரும் உயிரிழந்தனர். வெள்ளம் பாதித்த சாச்சர் மாவட்டத்தில் 6 பேரை காணவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 72 நிவாரண முகாம்களில், 33,248 பேர் தங்கியுள்ளனர்.

2,800 பயணிகள் மீட்பு

நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் திமா ஹசோ மாவட்டத்தில் உள்ள லும்டிங்-பாதர்பூர் வழித்தடத்தில், 2 ரயில்களில் 2,800 பயணிகள் கடந்த 2 நாட்களாக சிக்கி தவித்தனர். அவர்களை விமானப்படையினர் உதவியுடன் இந்திய ரயில்வே மீட்டது. சேதமடைந்த ரயில் பாதைகளை சரிசெய்ய வேண்டியுள்ளதால், இங்கு சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.