கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமெரிக்கா

கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.

நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு வைத்து இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 13-ந் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. உள்நாட்டில் விலை ஏற்றத்தை தடுக்கிற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

ஆனாலும், ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற இடைக்கால ஏற்பாடாக அவற்றுக்கு மட்டும் ஏற்றுமதி அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது உக்ரைன் மீதான ரஷிய போரால் கோதுமை வினியோக சங்கிலி பாதித்துள்ளது. இதனால் உலகளவில் கோதுமை விலை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதி மீது பிறப்பித்துள்ள தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உலகளாவிய உணவு பாதுகாப்பு பற்றி ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷிய போரால் உணவு பாதுகாப்பின்மை பிரச்சினை அதிகரித்துள்ளது. ரஷியாவின் போரினால் விவசாய உற்பத்தி பொருட்களை முன்னோக்கி செல்லாமல் தடுத்துள்ளது.

இது உணவுப்பற்றாக்குறையை அதிகரிக்கும் என்பதால் கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று நாடுகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெறும் எங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். மற்ற நாடுகளால் எழுப்பப்படும் கவலைகளை அவர்கள்(இந்தியா) கேட்கிறபோது, அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.