“கச்சத்தீவை இந்தியாவுக்கு குத்தகைக்கு விட முயற்சி!" – இலங்கை மீனவர் சங்கத்தினர் குற்றச்சாட்டு

இலங்கை மன்னார் மாவட்டத்தில் மீனவர் சங்க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கச் செயலாளர் என்.எம்.ஆலம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கச்சத்தீவுப் பகுதி இந்தியாவுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும், பரவலாக மன்னார் மாவட்ட மீனவர்கள் மூலமாகவும் அறிந்து வருகிறோம்.

இதன் உண்மைத் தன்மையானது மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களாகச் செயல்படும் எங்களுக்கே இன்னும் தெரியாது. இருந்தாலும் இந்திய தரப்பினரால் தொடர்ச்சியாக இந்த கச்சத்தீவுப் பகுதி இந்திய மீனவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்ற கருத்தை அவர்கள் தொடர்ந்து அங்கு வலியுறுத்தி வருகின்றனர்.

கச்சத்தீவு

இந்நிலையில், தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி இந்த அரசாங்கத்தில் கடந்தகாலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள், நிதியமைச்சர்களாக இருந்தவர்களின் தன்னிச்சையான செயல்பாட்டினால், கச்சத்தீவை குத்தகைக்கு விடுவது தொடர்பாக இந்தியாவிடம் பேசப்பட்டுக் கொண்டிருக்கலாம் என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்கப்படுவதாக இருந்தால் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உண்மையில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு உரிமை உள்ளதாக இருந்தபோதும்கூட, இந்திய மீனவர்களால் இந்த வடபகுதி மற்றும் மன்னார் மாவட்ட கடல் பகுதி தொழில்ரீதியான ஆக்கிரமிப்பின் ஊடாகவும், ஏனைய கடத்தல் நடவடிக்கைகளின் ஊடாகவும், கடலில் உள்ள மீன் வளங்கள் அழிந்து, போதைவஸ்து கடத்தல் சம்பவங்கள் இங்கு அதிகமாக பதிவாகி வருகின்றன.

இதனால் பாதிக்கப்படப்போவது இலங்கை வடபகுதி மீனவர்கள் மட்டுமல்ல… இந்த இலங்கை நாடும் முழுவதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

மன்னார் மாவட்ட மீனவர் சங்க செயலாளர் என்.எம்.ஆலம்

எனவே, இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் இந்த கச்சத்தீவு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி இது இலங்கைக்குச் சொந்தமானது என்பதை வலியுறுத்தி, இலங்கை பொருளாதார நெருக்கடிக்காக நமது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு ஒவ்வொரு தீவுகளையும் விற்கும் நடவடிக்கையில் இறங்கினால், அதைவிட நாங்கள் மடிந்து போவது மேல் என்பதை இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.