இந்திய பகுதியை சீனா ஆக்ரமித்துள்ளதா? மத்திய அரசு விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி:
இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, லடாக் பகுதியில் அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தனர்.
இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவுடனான எல்லை பகுதியில் பாதுகாப்பை இந்திய ராணுவம் பலப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா இரண்டாவது பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. 
இது குறித்து மத்திய அரசு பதில் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்திய பகுதியை சீனா ஆக்ரமித்துள்ளதா என்பது குறித்து 
வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். 
இது மிகவும் முக்கிய பிரச்சினை என்றும், பிரதமர் தமது சொந்த புகழை பெரிதுபடுத்துவதை கைவிட்டு நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
சீனா ராணுவத்தின் உதவியுடன் பாங்காங் த்சோ ஏரி மீது முதல் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது 2வது பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  
போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீனா மீறுவதாகவும்,  இதற்கு இந்தியா உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக அருணாச்சல பிரதேச மாநிலம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் சீன ராணுவம் உள் கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி கலிதா அண்மையில் தெரிவித்திருந்தார்.  
எனினும் நிலைமையை இந்திய ராணுவம் கண்காணித்து வருகிறது என்றும்,  எந்த நிலையையும் எதிர்கொள்ளவும் இந்திய ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.