பெகாசஸ் வழக்கு: விசாரணை குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 3 பேர் கொண்ட  விசாரணை குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஜூன் 30ந்தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின்  பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் என என 300க்கும் அதிகமானோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.  நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய  இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய பதில் தரக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி செய்து, நாடாளுமன்றத்தை முடக்கியது. மேலும், பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின், விசாரணைக்கு வந்தபோது, பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில், அலோக் ஜோஷி மற்றும் சந்தீப் ஓபராய்  ஆகியோரைக் கொண்ட  3 பேர் குழுவை மத்தியஅரசு நியமித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த குழுவினர், ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதையடுத்து இறுதி அறிக்கை மே 20ந்தேதி தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குழுவின் தரப்பில், ‘இதுவரை 29 செல்போனின் தகவல்கள் குறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுவரை இடைக்கால அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இதையேற்ற தலைமை நீதிபதி அமர்வு, ‘பெகாசஸ் வழக்கில் விசாரணைக் குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. வரும் ஜூன் 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும்’ என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.