90 பணிகள்… 232கி.மீ… திருச்சியில் தூர்வாரப்படும் ஆறுகள், கால்வாய்கள்!

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (மே 20)  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வரால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாருவதற்குரூ.18.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் கால்வாய், குடமுருட்டி ஆறு, கொடிங்கால், நந்தியாறு, பங்குனி வாய்க்கால், சோழகம்பட்டிவாரி, ஆனந்த காவேரி, கோரையாறு, அரியாறு போன்ற மிக முக்கியமான வாய்க்கால் மற்றும் மழைவடிநீர் வாய்க்கால்கள் என மொத்தம் 90 பணிகள் 232.59 கி.மீ நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து மணிகண்டம் ஒன்றியம் புங்கனூரில் அரியாறு, கருமண்டபம் பகுதியில் கோரையாறு, வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் பாலம் மற்றும் பாத்திமாநகர் பகுதியில் குடமுருட்டி ஆறு மற்றும் கம்பரசம்பேட்டை பகுதியில் கொடிங்கால் வாரி ஆகியவற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(மே 20) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உரிய அளவீடுகளின்படி தூர்வாரும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும் வருகின்ற மே31ஆம் தேதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.   மேலும், இந்த தூர்வாரும் பணிகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள உழவர் குழுக்களின் பணிகள் பற்றியும், விவசாயிகளின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

இப்பணிகள் நிறைவு பெறும் போது திருச்சிராப்பள்ளி மாநகரம், இலால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி(மேற்கு)ஆகிய வட்டங்கள் முழுமையாக பயன்பெறும் என்றும் திருச்சி மாவட்டம் வெள்ள பாதிப்பிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், திருச்சிராப்பள்ளி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ச.ராமமூர்த்தி, மாநகர மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி,  அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், மாவட்டப் பிரமுகர் க.வைரமணி, மாநகராட்சிஆணையர் ப.மு.நெ முஜிபுர் ரகுமான், கண்காணிப்புப் பொறியாளர்கள் இரா.திருவேட்டைசெல்லம், செயற்பொறியாளர்கள் இரா.மணிமோகன், அ.நித்யானந்தன் ஒன்றியக்குழுத் தலைவர் கமலம் கருப்பையா மற்றும் கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நீர்வளத்துறை பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.