ஐ.பி.எல். கிரிக்கெட்: வாழ்வா-சாவா போராட்டத்தில் டெல்லி அணி

டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளியை எட்டுவதுடன் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விடும். ஏனெனில் ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் பெங்களூரு அணியின் ரன் ரேட்டை (-0.253) விட டெல்லி அணியின் ரன்-ரேட் (+0.255) உயர்வாக இருக்கிறது. மாறாக டெல்லி தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும். அதேநேரத்தில் பெங்களூரு அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கும். எனவே இந்த ஆட்டம் டெல்லி அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும். கடந்த 2 லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்த உத்வேகத்துடன் டெல்லி அணி உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் டேவிட் வார்னர் (427 ரன்கள்), ரிஷாப் பண்ட், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரோமன் பவெலும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், கலீல் அகமது, ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், அன்ரிச் நோர்டியா, அக்‌ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள். ‘டைபாய்டு’ காய்ச்சலில் இருந்து குணமாகி வந்து இருக்கும் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் தள்ளாடுகிறது. இதற்கு முன்பு மும்பை அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்துக்கு ஒருபோதும் தள்ளப்பட்டது கிடையாது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த பின்னர் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து வருங்கால அணியை கட்டமைக்க பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் மும்பை அணி கடைசி இடத்தை தவிர்க்க கடுமையாக முயற்சிக்கும். அந்த அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் வெற்றியை நெருங்கி வந்து 3 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோல்வியை சந்தித்தது.

மும்பைக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அந்த அணிக்கு எதிரான கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததில்லை. எனவே கூடுதல் நம்பிக்கையுடன் டெல்லி அணி களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் தான் தங்களது அடுத்த சுற்று தலைவிதி இருப்பதால் டெல்லி அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற மும்பை அணி முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டத்தின் முடிவுக்காக டெல்லி மட்டுமின்றி பெங்களூரு அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.