”உண்மையான துறவிகளாக ஆதீனங்கள் வாழவில்லை”- பழ. நெடுமாறன்

தஞ்சாவூர் விளார் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்திருந்தார். அவரைச் சந்தித்து இலங்கைப் பிரச்னை, பட்டணப் பிரவேசம், தி.மு.க அரசின் ஓராண்டு ஆட்சி உள்ளிட்ட பல கேள்விகளை முன் வைத்தோம். அனைத்திற்கும் வெளிப்படையாக பதில் அளித்தார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன்

1. இலங்கையில் இப்போது நிலவும் பிரச்னைகள் உங்களுக்கு எதை உணர்த்துகின்றன?

இனவெறியையும்,மதவெறியையும் அப்பாவி மக்களிடம் தூண்டி விட்டு அரசியல் நடத்துபவர்களின் இறுதி கதி என்னவாகும் என்பதை இலங்கையில் இப்பொழுது ராஜபக்‌ஷேவிற்கு எதிராக சிங்கள மக்களே வீதிகளில் இறங்கிப் போராடுகிற நிலைமை எடுத்துக்காட்டுகிறது. எந்த சிங்கள மக்கள் ராஜபக்‌ஷே சகோதரர்களை மிகப் பெருவாரியான வாக்குகளால் வெற்றி பெற வைத்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினார்களோ அதே மக்கள் இன்றைக்கு ராஜபக்‌ஷேக்களை வெளியேறுங்கள் என்ற முழக்கத்துடன் அவர்களின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராடுகிறார்கள். வரலாறு அதைத்தான் நமக்குச் சொல்கிறது. ஜெர்மானிய மக்களுக்கு இனவெறியை ஊட்டி, யூத மக்களுக்கு எதிராக அவர்களுக்குக் கொலை வெறியை ஊட்டி ஆட்சி பீடத்திற்கு வந்த ஹிட்லரின் கதி என்னவாயிற்று. அதே போல இத்தாலியில் முசோலினி ஆட்சி பீடத்திற்கு வந்த பிறகு அவருடைய வீழ்ச்சி நமக்கு எதைக் காட்டுகிறது. இதுதான் நமக்கு வரலாறு கற்பிக்கிற பாடமாகும். இந்தப் பாடத்தை ராஜபக்‌ஷேக்கள் மட்டுமல்ல சர்வாதிகார பாசிச ஆட்சி நடத்துகிறவர்கள் யாராக இருந்தாலும் உணர வேண்டும். உணரத் தவறினால் இதே நிலை உருவாகும்.

2. இலங்கைப் பிரச்னையால் நமக்கு கட்சத் தீவு திரும்பக் கிடைக்குமா?

இலங்கையின் இனப்பிரச்னை என்பது இனப்பிரச்னை என்ற கட்டத்தைத் தாண்டி இந்தியாவுக்கும், தென் ஆசிய நாடுகளுக்கும் அபாயமான ஒரு பிரச்னையாக ஆகிவிட்டது. இலங்கையில் ராஜபக்‌ஷேவின் ஆட்சியில் சீனா ஆழமாகக் காலூன்றிவிட்டது. இலங்கை என்னனென்ன கேட்கிறதோ, ராணுவ ரீதியான, பொருளாதார ரீதியான உதவிகளாக இருந்தாலும் சரி, சீனா அள்ளி அள்ளிக் கொடுத்தது. எதற்காக, இலங்கை ஒரு சின்னஞ் சிறிய நாடு. சீனாவின் பொருள்களை விற்பதற்கு அது சந்தையல்ல. இலங்கையினால் சீனாவிற்கு எந்த ஆதாயமும் கிடையாது. ஆனாலும் அவர்கள் கொட்டிக் கொட்டிக் கொடுத்தார்களே ஏன்? இந்தியாவிற்கு எதிரான ஒரு தளமாக இலங்கை நமக்குப் பயன்படும் என்ற காரணத்தினால் அவர்கள் அதைச் செய்தார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு வந்த அழிவைவிட இந்தியாவின் தெற்குப் பகுதிக்குப் பேரழிவு காத்திருக்கிறது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்துமா கடல் மார்க்கத்தில் செல்லக் கூடிய வணிகக் கப்பல்கள் மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்குச் செல்கிற கப்பல்களும், கிழக்கு நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லக் கூடிய வணிகக் கப்பல்களும், அரேபிய நாடுகளிலிருந்து செல்லக் கூடிய எண்ணெய்க் கப்பல்களும் இந்துமா கடல் மார்க்கத்தின் எல்லை வழியாகச் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது.

இந்தக் கடல் மார்க்கம் சீனாவின் கையில் சிக்கப்போகும் அபாயம் இருந்தால் மேற்கு நாடுகளுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் ஆபத்து இருக்கிறது.1962-ம் ஆண்டில் சீனப் படையெடுப்பு இந்தியாவின்மீது நடைபெற்ற போது உலகம் தலையிட்டு அது முடிந்தது. ஆனால் அன்றைய பிரதமர் ஜவர்ஹலால் நேரு ஒரு முடிவு எடுத்தார். இனி வடக்கே சீனா என்றைக்கும் ஆபத்து, மேற்கே பாகிஸ்தான் நிரந்தரமான பகைவன். ஆகவே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் அல்லது தளங்கள் எதையும் வட இந்தியாவில் அமைக்க வேண்டாம், தெற்கே மாற்றுங்கள் என ஆணை பிறப்பித்தார்.

பழ. நெடுமாறன்

இன்று வரைக்கும் சுமார் 700 ராணுவத் தொழிற் சாலைகளும், ராணுவத் தளங்களும், கடற்படைத் தளங்களும்,விமானப்படைத் தளங்களும், விமான உற்பத்தி நிலையங்களும் தெற்கே அமைக்கப்பட்டுள்ளன. ஏன் தெற்கே அமைக்கப்பட்டது என்றால் தெற்கே இலங்கையைத் தவிர எந்த நாடும் கிடையாது. இலங்கை நம்முடைய பிராந்தியங்களுக்குக் கட்டுப்பட்ட நாடு. எனவே தெற்கே அபாயம் இல்லை என்று நேரு கருதினார். இன்றைக்கு தெற்கேதான் அபாயம், திபெத்திலிருந்து ஏவுகணை விட்டு இவற்றைத் தாக்க வேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை. பக்கத்தில் இலங்கையின் இருபது கல் தொலைவிலிருந்து இவற்றையெல்லாம் குறிபார்த்துத் தாக்கக் கூடிய நிலைமை இருக்கிறது. இந்துமா கடல் மார்க்கம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தோடுதான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உருவாக்கியிருக்கிற குவாட் அமைப்பில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி இலங்கையில் உருவாகிக் கொண்டிருக்கிற அந்தப் பேரபாயத்தை குவாட் அமைப்பின் மூலம் தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு முன்வரவேண்டும். ஈழத்தமிழரோடு இணைந்த பிரச்னைதான் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த பிரச்னை ஆகும். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவே கூடாது. விடுதலைப்புலிகளின் கைகள் ஓங்கியிருந்த காலக்கட்டத்தில்கூட இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதிலும் அவர்கள் எந்த உதவியும் பெறவில்லை; பெறவும் மறுத்தார்கள். இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாங்க ஒருபோதும் செயல்பட மாட்டோம் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பகிரங்கமாகவே அறிவித்தார், கடைசி வரை அதைப் பின்பற்றினார். ஆனால் சிங்களவர்கள் இந்தியாவிற்கு எதிரி நாடான சீனாவிடம், பாகிஸ்தானிடம் உதவிகள் பெறுவதற்கு ஒருபோதும் தயங்கவில்லை. இப்போதாவது இந்திய அரசும், அகில இந்திய கட்சித் தலைவர்களும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சரியான சந்தர்ப்பம். அதைப் பயன்படுத்தி குவாட் அமைப்பின் மூலம் இலங்கையின் இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கும், இந்தியாவின் அபாயத்தைத் தடுப்பதற்கும் இந்துமா கடலின் கட்டுப்பாட்டினைத் தன் கையில் கொண்டு வரவும் இந்தியாவிற்குக் கிடைத்திருக்கிற பெரிய வாய்ப்பு இது. இதை உடனடியாகச் செய்வதற்கு இந்திய அரசு முன்வரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

3. பேரரறிவாளன் விடுதலை பற்றி?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 13 ஈழத்தமிழர்களும்,13 தமிழ் நாட்டுத் தமிழர்களும் கைது செய்யப்பட்டார்கள். 26 தமிழர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த தடா நீதிமன்றம் 26 பேருக்கும் ஒட்டுமொத்தமாகத் தூக்கு தண்டனை விதித்தது. உலக வரலாற்றிலேயே எந்த ஒரு கொலை வழக்கிலும், எந்த நாட்டிலும் இப்படி ஒட்டுமொத்தமாக 26 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக சரித்திரமே கிடையாது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் ஆமஸ்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு இதை ஜுடிஷியல் டெரர் என வர்ணித்தது. வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்ற நீதியரசர்களும் இந்தத் தீர்ப்பைக் கண்டித்தார்கள். தீர்ப்பிற்கு எதிராக தடா சட்டத்தின் படி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்திற்குத்தான் செல்ல வேண்டும். எனவே அன்றைக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கைக் கொண்டு செல்வதற்காக என்னுடைய தலைமையில் 26 தமிழர்களின் உயிர்காப்புக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் மூலம் நாங்கள் மக்களிடம் நிதி திரட்டினோம். எந்த ஒரு அரசியல் கட்சியும் எங்களுக்கு ஆதரவாக அன்றைக்குச் செயல்படவில்லை. தமிழ் அமைப்புகளே ஒன்றுதிரண்டு இந்த நிதியைத் திரட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மூவருக்கு ஆயுள் தண்டனையும், நால்வருக்குத் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்தும் போராடினோம். அது ஒரு நீண்ட நெடிய வரலாறு. எல்லாம் ஆன பிறகும்கூட 2018-ல் தமிழக அமைச்சரவை கூடி இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் ஆளுநர் அந்தப் பரிந்துரையை இரண்டரை ஆண்டுக் காலமாகக் கிடப்பில் போட்டார். உச்ச நீதிமன்றம் தலையிட்டு பரிந்துரையின் மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்னவென்று கேட்ட போது ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணைக் குழு ராஜீவ் கொலை வழக்கில் மறைந்திருக்கக் கூடிய சதியைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறது என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்துக்கொண்டிருக்கிற அந்தக் குழுவின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

பழ. நெடுமாறன்

ஆனால் அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் ஆளுநர், அமைச்சரவை என்ன பரிந்துரை செய்கிறதோ அதை ஏற்றுச் செயல்பட வேண்டியது தவிர அவருக்கு வேறு அதிகாரமே கிடையாது. ஆனால் ஆளுநர் அதை மீறி உச்ச நீதிமன்றம் இதை விசாரிக்கத் தொடங்கியவுடன் அந்தப் பரிந்துரையை நான் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். குடியரசுத் தலைவர் இதில் தலையிடுவதற்கு அரசியல் சட்டப்படி அதிகாரம் கிடையாது. ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் அதைத்தான் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. அரசியல் சட்டத்தின் படி ஆளுநர் ஒரு மாநிலத்திற்குப் பெயரளவிற்குத்தான் தலைவர். ஆனால் மாநில அமைச்சரவை காட்டுகிற அறிவுரைகளின் படி அல்லது அளிக்கிற பரிந்துரைகளின் படி செயல்பட வேண்டியதே தவிர அவருக்கு வேறு வேலை கிடையாது. தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது.

இதை உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டு வன்மையாகக் கண்டித்திருக்கிறது. இந்தத் தாமதம் குறித்துக் கேள்வி கேட்ட பிறகுதான் அவசர அவசரமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதுவும் தவறு. பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்படும் போது அவருக்கு வயது 19. சிறையில் 32 ஆண்டுக்காலம். அதில் 16 ஆண்டுக் காலம் தூக்கு மேடையின் நிழலில் இருந்து எந்த நேரம் உயிர் பறிபோகுமோ என்ற நிலைமையில் வாழ்ந்தவர். இப்போது அவருக்கு 51 வயது ஆகிறது. வாழ்வின் வசந்த காலத்தை சிறையில் இழந்திருக்கிறார். மற்ற ஆறு பேரும் அப்படித்தான். இவர்களின் வாழ்க்கை சீரழிந்ததற்கு யார் காரணம். ஒரு பொய்யான வழக்கைத் தொடர்ந்து உண்மையான குற்றவாளிகளைத் தப்ப விட்டுவிட்டு அதைப் பற்றி விசாரிப்பதற்கு ஜெயின் கமிஷன் அளித்த பரிந்துரையின் படி அமைக்கப்பட்ட பல் நோக்கு விசாரணைக் குழு இன்னமும் விசாரிக்கிறோம் எனக் காலம் கடத்துவதையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி மற்ற ஆறு பேரும் உடனடியாக விடுவிப்பதற்குத் தமிழக அரசு முன் வரவேண்டும். அதுமட்டுமல்ல, 26 பேருக்கும் வாழ்கையைச் சீரமைத்துக் கொள்வதற்குத் தேவையான நிதி உதவியைத் தமிழக அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் இணைந்து அளிக்க வேண்டும். இதே போல அரசியல் காரணங்களுக்காகத் தொடுக்கப்பட்ட வழக்கின் கீழ் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடுகிற இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்வதற்கு அரசு முன்வர வேண்டும். ஆகவே உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பு உன்னதமானது. அரசியல் சட்டத்தின் படி ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என்பதை நிலைநாட்டுகிற தீர்ப்பு. இப்பிரச்னையில் மட்டுமல்ல தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டிருக்கிற நீட் தேர்வு உள்ளிட்டவைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களை எல்லாம் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார். அமைச்சரவையும், சட்டமன்றமும் என்ன பரிந்துரை செய்ததோ அதை ஏற்றுத் தீரவேண்டும் என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது. எனவே அந்தச் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என நான் வற்புறுத்துகிறேன். இல்லாவிட்டால் அரசியல் சட்டத்தை அப்பட்டமாக அவர் மீறுகிறார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க முன் வருமாறு நான் தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்.

4. தி.மு.க அரசின் ஓராண்டு ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஓராண்டு ஆட்சியில் ஒரு ஆட்சியைப் பற்றி மதிப்பிட்டுவிட முடியாது. ஆட்சியில் ஐந்தாண்டுகளில் சரி பாதியாவது கடந்த பிறகுதான் அதைப்பற்றித் துல்லியமான மதிப்பீடு செய்ய முடியும். ஆனாலும் இந்த ஆட்சியைப் பொறுத்தவரை பெரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. மக்களின் பிரச்னைகளான குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்றில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு மத்திய அரசு நுழைவுத் தேர்வு நடத்துகிற போக்கிற்கு முதலமைச்ச்சர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதோடு நிற்காமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தேவையில்லை என்பதற்காக சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் தமிழக அரசு உடனடியாகச் செய்ய முன் வர வேண்டும். காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஆணையம் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்த போதிலும்கூட இடைக்கால ஏற்பாடுதான் மத்திய அரசு செய்திருக்கிறது. அதற்கும் அதிகாரம் இல்லை. முழுமையான அதிகாரம் கொண்ட ஒரு ஆணையத்தை அமைப்பதற்கு அவசியமானால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அதனைப் பெறுவதற்குத் தமிழக அரசு முன்வர வேண்டும். இதுபோல் முக்கியமான பிரச்னைகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுப்பட்டு நின்று இந்த மக்களின் கோரிக்கைகளுக்காகப் போராட முன்வர வேண்டும். அதற்கு தமிழக அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அடிப்படையான பிரச்னைகள் தீரும் என்று எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

பழ. நெடுமாறன்

5.பட்டணப்பிரவேசம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆதீனங்கள் மீதான சர்ச்சை பற்றி?

மனிதனை மனிதன் சுமக்குற பழக்கம் உலக நாடுகளில் எல்லாம் ஒழிக்கப்பட்டு எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. பல்லக்கில் போவது என்பதும், மனிதர்கள் தூக்கிக் கொண்டு ஓடுவது என்பதும் மன்னர் காலத்துப் பழக்கம். நாகரிகமான இந்தக் காலத்தில் அந்தப் பழக்கத்தை எல்லாம் ஒழித்து விட்டாகவேண்டும். பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தில்கூட அந்தப் பழக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நம்முடைய சில ஆதீனங்கள் ஒரு உண்மையான துறவி எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழாமல் தன்னை மனிதர்கள் சுமக்க வேண்டும் என்று விரும்புவது அவர்கள் நம்புகிற இறைவனுக்கே இழைக்கப்படுகிற அநீதியாகும்.

6. பல்லக்கு, பசுமடம் உள்ளிட்ட விவகாரங்களில் பா.ஜ.க-விற்கு தி.மு.க அரசு அடிபணிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

பா.ஜ.க இந்தப் பிரச்னைகளில் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆதீனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது தவறு. தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். இதே தமிழ்நாட்டில் மனிதர்கள் இழுக்கிற ரிக்‌ஷாக்களை எல்லாம் ஒழித்தார்கள். மனிதர்கள் சுமைகளை வைத்துக்கொண்டு இழுக்கிற வண்டிகளை ஒழித்தார்கள். எல்லாம் இன்றைக்கு மாறிவிட்டன. ஆனால் இதுமட்டும் ஏன்? உண்மையான துறவி எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு வள்ளுவர் உள்ளிட்ட மற்றவர்கள் எல்லாம் சொல்லியிருக்கின்றனர். ஆனால் ஆதீனங்கள் மட்டும் எதையும் மதிக்காமல் பழைய போக்கில் வாழ்கிறார்கள். சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஆதீனங்கள் அந்த வேலையைத் தவிர மற்ற வேலைகளைச் செய்கிறார்கள். நான் எல்லா ஆதீனங்களையும் சொல்லவில்லை. இது தேவையில்லாத வேலை. இவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நான் அழுத்தம் திருத்தமாக இருக்கிறேன்.

7. பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலையுடன் ஒரே மேடையில் ஏறியிருக்கீங்க, உங்க நிலைப்பாடு என்ன?

பதில் சொல்லவில்லை.

8. தமிழகத்தின் எதிர்கால அரசியல் எப்படியிருக்கும் அடுத்தடுத்த தேர்தல்கள் யாருக்கும் யாருக்குமான போட்டியாக இருக்கும்?

நம்முடைய தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அரசின் எதிர்காலமே ஒரு முக்கியமான திருப்பத்தை அடைந்திருக்கிறது. பா.ஜ.க-வின் மதவாத அரசியலுக்கு எதிராக இன்றக்குப் பல்வேறு மாநிலக் கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்றுகூடிப் பேசுகிறார்கள். ஒரு கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்திற்கு இன்னும் தெளிவாக முடிவெடுக்கவில்லை. பா.ஜ.க என்ன சொல்கிறது, ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்து மதம் என்கிறது. இதற்கு மாற்றுத் திட்டம் என்ன வைக்க வேண்டும், ஆனால் அவர்கள் வைக்கவில்லை. மாநிலங்களுக்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம், ஒன்றிய அரசுக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்.

பழ. நெடுமாறன்

ராணுவம், வெளிநாட்டு உறவு, ரிசர்வ் வங்கியைக் கட்டுப்படுத்துதல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே ஒன்றிய அரசுக்கு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இவர்கள் மக்கள் முன்னால் வைக்க வேண்டும். பா.ஜ.க அரசை வீழ்த்திவிட்டு ஒரு மாற்று அரசு அமைப்பது என்பது வெறும் வாய் பேச்சினால் ஆகிவிட முடியாது. பா.ஜ.க வைக்கிற திட்டத்திற்கு உங்கள் மாற்றுத் திட்டம் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லி மக்கள் முன் வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி அதைச் செய்யத் தவறிவிட்டது. இதேபோல் காங்கிரஸும் ஒன்றிய அரசில் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தைக் குவித்துக் கொள்வதற்காக 100 தடவைக்கு மேல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

ஆகவே இந்த அரசியல் சட்டத்தை முற்றிலுமாகத் தூக்கியெறிய வேண்டும்.1950-ல் இந்த அரசியல் சட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.1956-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. மொழிவாரியாகப் பிரிப்பதற்கு முன்னாள் உருவான அரசியல் சட்டம் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த பிறகு அதற்குப் பொருந்தவில்லை. இதை உணர வேண்டும். ஆகவே புதிய அரசியல் நிர்ணய சபையைக் கூட்டி மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரமும், ஒன்றிய அரசுக்குக் குறிப்பிட்ட சில அதிகாரங்களும் இருக்கும்படியான ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கு மாநிலக் கட்சிகள் முன்வந்து அதை மக்கள் முன்னால் வைத்தால் ஒழிய எதிர்கால அரசியல் எதிர்பார்க்கிறபடி அமையாது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.