ஊட்டியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்

கோவை:

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அரசு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18ந் தேதி இரவு கோவை வந்தார்.

கோவையில் தங்கி ஓய்வெடுத்த அவர் மறுநாள் 19ந் தேதி காலை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஒராண்டு சாதனை ஒவிய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 3 மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடினார்.

அப்போது கோவைக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்ததுடன், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தொழில் முனைவோர்கள் கூறிய கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

கோவை நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு 19ந் தேதி மாலை நீலகிரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணமானார். அங்கு 20ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த 124வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, மலர்களால் உருவாக்கப்பட்ட மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து கொண்டார்.

நேற்று குழந்தைகளுக்கான சிறப்பு ஊட்டச்சத்து முகாம், ஊட்டியை உருவாக்கிய முதல்-கலெக்டர் ஜான்சல்லிவன் சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஊட்டி 200வது ஆண்டு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயானிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சிகள் முடிந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கி ஓய்வெடுத்தார்.

கோவை, நீலகிரியில் 5 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஊட்டியில் இருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் வழியாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.