குரூப் 2 தேர்வு: தேர்வு அறைக்குள் செல்போன் வைத்திருந்த இளைஞர்… சாதுர்யமாகக் கண்டுபிடித்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 பணிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 9:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு நுழைந்த அனைவரையும், நுழைவாயிலில் போலீஸார் சோதனைசெய்து தேர்வு அறைக்குள் அனுப்பிவைத்தனர்.

அந்தப் பள்ளியில் 20 பேருக்கு ஒரு அறை என ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 30 அறைகளில் மொத்தம் 600 பேர் தேர்வெழுதினர். 64 பேர் தேர்வு எழுத வரவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தேர்வு நடைபெறும் மையங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பரமக்குடியில் உள்ள அந்த தேர்வு மையத்தை பார்வையிட வந்தபோது அவருடைய செல்போன் ப்ளூடூத்தை ஆன் செய்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு தேர்வு அறைக்குள்ளும் நுழைந்தார். அப்போது ஒரு தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் அவருடைய செல்போன் தேடலில் ஒருவரது ப்ளூடூத் பெயர் காட்டப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பில் இருந்த போலீஸாரை அழைத்து, “இங்கு யாரோ செல்போன் வயோதிருக்கிறார்கள். சோதனை செய்யுங்கள்” எனக் கூறினார். அதன்படி அந்த தேர்வு அறையில் இருந்த 20 தேர்வர்களை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் தன்னுடைய பேன்டின் இடுப்பில் செல்போனை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞரை தேர்வு அறையிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டு, அவரிடம் விசாரணை நடத்துமாறு போலீஸாரை அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது செல்போனை சோதனை செய்தபோது அதில் யாருடைய அழைப்புகளும் ஏற்கபடாமல் சைலன்ட் மோடில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்

மேலும், அந்த இளைஞர் போலீஸாரிடம், “என்னை யாரும் பரிசோதனை செய்யவில்லை. அதனால் செல்போனை எடுத்து வந்தேன். அனால், செல்போனை பயன்படுத்தி தேர்வு எழுதவில்லை” எனத் தெரிவித்துள்ளார். ப்ளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தது குறித்து போலீஸார் கேட்டதற்கு, “அது தானாக ஆன் ஆகிவிட்டது. என்னிடம் ப்ளூடுத் ரிசீவர் எதுவும் இல்லை. வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து, செல்போனை பறிமுதல்செய்து அந்த இளைஞரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.