தொழில் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி; சூழலியல் பாதுகாப்புக்கு ஓர் ஆபத்தான முன்மாதிரி!

ஏற்கெனவே ஒரு தொழில் தொடங்கப்பட்ட பிறகு, ‘விதி விலக்கான சூழ்நிலைகளில்’ மட்டும் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆபத்தான முன்மாதிரியாக ஆகிவிடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டில், சினோகெம் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக, தஸ்தாக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹரியானாவில் உள்ள 15 ரசாயன அலகுகள், ஃபார்மால்டிஹைடு என்ற எரியக்கூடிய ரசாயனத்தை உற்பத்தி செய்யும் பஹ்வா பிளாஸ்டிக்குகள், சுற்றுச்சூழல் அனுமதி (EC) மற்றும் தேவையான பாதுகாப்புகள் இல்லாமல் இருந்தன. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக ஹரியானாவில் உள்ள இந்த 15 ரசாயனப் பிரிவுகளை மூடுமாறு ஜனவரி 2021-ல், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

டெல்லியில் மோசமடையும் காற்று மாசுபாடு

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து, ஆகஸ்ட் 2021-ல் உச்ச நீதிமன்றத்தில், பஹ்வா பிளாஸ்டிக் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மார்ச் 25, 2022 அன்று, உச்ச நீதிமன்றம், தேசிய பசுமை தீர்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. ‘இந்த நிறுவனம் சுமார் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது. எனவே உற்பத்தி அலகுகளை மூட உத்தரவிட முடியாது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் நிறுவனங்கள் தொழில் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி பெறலாம்’ என உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என சூழல் வல்லநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ‘எக்ஸ் போஸ்ட் ஃபேக்டோ கிளியரன்ஸ்’ என்ற கருத்து, திட்ட ஆதரவாளர்களுக்கு முன் அனுமதியைப் பெறாமல் திட்டங்களை செயல்படுத்த ஒரு வழியை ஏற்படுத்துகிறது. இந்த பஹ்வா பிளாஸ்டிக் நிறுவன வழக்கு, முன்பிருந்த பிந்தைய நடைமுறை அனுமதி பற்றிய நீதிமன்றத்தின் புரிதலில் இருந்தும், சுற்றுச்சூழல் அனுமதியின் முக்கியத்துவத்தில் இருந்து கணிசமாக விலகுகிறது’ என கூறுகின்றனர்.

“எந்தவொரு தொழிலும், தொடங்குவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதை மதிப்பிட வேண்டும். அதற்குக் கணக்கிடப்பட வேண்டும், அதை வழிநடத்த வேண்டும்,” என நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் லா, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறிஞர் அர்பிதா கோடிவேரி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்

‘‘கடந்த 1986-ம் ஆண்டில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 1994-ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2006-ன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பால் மாற்றப்பட்டது. 1994 மற்றும் 2006 ஆகிய இரண்டு அறிவிப்புகளிலும், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு திட்டம் தொடங்குவதற்கு முன் நடத்தப்பட வேண்டும் என கூறுகின்றன. திட்டம் தொடங்குவதற்குப் பிறகு அல்ல. விதிவிலக்கான சூழ்நிலைகளில், எக்ஸ் போஸ்ட் ஃபேக்டோ அனுமதிகள் வழங்கப்படலாம் என நீதிமன்றம் கூறுகிறது. ஆனால் ஒரு சூழ்நிலை மற்றொன்றில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை வரையறுக்கவில்லை. ஆனால் சமீபத்திய உத்தரவுகளில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாததன் தாக்கம் பெரும்பாலும், மாசுபாட்டின் மீதான தாக்கத்தின் குறுகிய அர்த்தத்தில் மட்டுமே காணப்படுகிறது’’ என டெல்லியைச் சேர்ந்த வனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சட்ட அமைப்பின் நிறுவனரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ராகுல் சவுத்ரி கூறியுள்ளார்.

“முந்தைய சுற்றுச்சூழல் அனுமதி என்பது அறிவியல் பூர்வமான தகவல் மற்றும் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலானதாக இருக்கும்’’ என டெல்லியில் உள்ள தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியை ஸ்டெலினா ஜாலி கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திட்டத்தின் கண்காணிப்பு, நிபுணர்கள் குழு திட்ட ஆதரவாளர்களிடம் கவலைகள், சில திட்டங்களுக்கான பொது ஆலோசனை மற்றும் திட்டத்தின் மதிப்பீடு ஆகியவற்றைக் கேட்கிறது. “எக்ஸ் போஸ்ட் ஃபேக்டோ கிளியரன்ஸ், மறுபுறம், முன் அனுமதிக்கு தேவையான விடாமுயற்சியை நிராகரிக்கிறது” என்கிறார்.

சுற்றுச்சூழல்

“பஹ்வா பிளாஸ்டிக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதம், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளின் பிளவை ஆழமாக்குகிறது. நீதிமன்றங்கள் வாழ்வாதாரப் பிரச்சினையைச் சமாளிப்பதில் மிகவும் புதுமையான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், அதே நேரத்தில் அவர்கள் செய்யும் சுற்றுச்சூழல் மீறல்களுக்கு நிறுவனங்களை பொறுப்பேற்க வேண்டும்” என சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரும், வழக்கறிஞருமான கிருத்திகா தினேஷ் கூறியுள்ளார்.

மொத்தத்தில் தொழில் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது என்பது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கின்றனர்.

https://www.indiaspend.com

தமிழில்: சவீதா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.