“பஞ்சு, நூல் விலை சீராகும் வரை நூற்பாலைகளை இயக்க மாட்டோம்”- தென்னிந்திய நூற்பாலை சங்கம்

“பஞ்சு மற்றும் நூல் விலை சீராகும் வரை நூற்பாலைகளை இயக்குவதில்லை” என தென்னிந்திய நூற்பாலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறு நூற்பாலைகள் சந்தித்து வருகின்றன. கடந்த ஜனவரியில் 356 கிலோ உடைய ஒரு கேண்டி பஞ்சு விலை, 75 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது தற்போது, 1.15 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், கிலோ 328 ரூபாயாக இருந்த நூலின் விலை தற்போது ரூ. 399 ஆக அதிகரித்துள்ளது. அபரிமித பஞ்சு விலை உயர்வுக்கு, நாட்டில் குறைந்த பருத்தி விளைச்சலே காரணம். பருத்தி சீசன் துவங்கியதும், பெரிய பஞ்சு வியாபாரிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உடன்பாடு எட்டப்பட்டு, அதிக அளவில் பஞ்சை கொள்முதல் செய்து, வியாபாரிகள் இருப்பு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
image
மேலும், அதிக அளவு பஞ்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், பஞ்சு விலை கடுமையாக உயர்ந்தது. தமிழகத்திலுள்ள நூற்பாலைகள் பஞ்சு கொள்முதல் செய்வதில் மூலதன பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக புலம்பும் நூற்பாலை உரிமையாளர்கள், நூற்பாலைகளை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க… பேரறிவாளனை தொடர்ந்து 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், “பஞ்சு விலை ஒரு கேண்டி 1.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. நிலைமை கை மீறி போய்விட்டது. இச்சூழலில் பஞ்சை கொள்முதல் செய்து, நாங்கள் நூலை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது.
image
மிகவும் சிரமம் என்பதால் தான், பஞ்சு மற்றும் நூல் விலை சீராகும் வரை இந்த நிமிடம் முதல் நூற்பாலைகளை இயக்குவதில்லை என்றும், பஞ்சு கொள்முதல் செய்வதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம். இதனால் பல லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். இதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். வருவாய் இழப்புடன், அந்நிய செலாவணியிலும் பாதிப்பு ஏற்படும்” என தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.