'இனி வேறு வழியே இல்லை பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும்' – பிரசாந்த் கிஷோர்

“நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும்” என்று பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் சார்பில் தேசியக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:
இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்தவொரு விஷயமோ அல்லது கருத்தியலோ அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் அது சரிவை சந்திக்கும் என்பதுதான் விதி. எனவே பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என பலரும் கருதுகின்றனர். இதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்.
image
ஆனால் இந்த விஷயம் இப்போது உடனே நடைபெற்றுவிடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 வருடங்களுக்குள் நடைபெறாது. அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது.
image
அதற்காக, இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என நான் கூறவில்லை. ஆனால், அடுத்த 20 – 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்திதான் இந்திய அரசியல் சுழலும் என்றுதான் கூறுகிறேன். இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால், நீங்கள் அடுத்த 20 – 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும்; இல்லையெனில் எதிர்க்க வேண்டும். மாறாக அக்கட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது என்ற சூழலே நிலவும். சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.