சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா – சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை

சென்னை மற்றும் சுற்றி இருக்கும் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கிளஸ்டராக உருவாகுவதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கொரோனா மற்றும் காய்ச்சல் பரவுதல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செயலாளர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகி வருவதாக தெரிவித்தார்.
தற்போது அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அதேபோல் சென்னையில் மக்கள் கவனக் குறைவாக இருப்பது தெரிகிறது என தெரிவித்தார். BA4 தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது என்று கூறினார்.
image
அதேபோல் குரங்கு அம்மை நோய் இந்தியாவில் இல்லை. இருந்தாலும் தொடர் கண்காணிப்பு செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் செய்து இருக்கிறோம். அதேபோல் வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் தேவைப்பட்டால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது டெங்கு தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது வரை 87 பேர் சிகிச்சையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அடையாறு, தேனாம்பேட்டை மண்டலத்தில் தொடர் கொரோனா தொற்று இருக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய மாநகராட்சி, சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்லூரி, பள்ளி மற்றும் மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். மக்கள் கவனக் குறைவாக இருக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அதேபோல் விமான நிலையத்தில் ஸ்கிரீனிங் செய்வதை கூடுதலாக கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுத்து இருப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்ளிட்ட மூத்த மருத்துவர்கள் உடன் இருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.