தமிழ்நாட்டை திமுக அரசு தலை நிமிர வைத்திருக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள செல்லியம்பாளையத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்த போது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை திமுக அரசு குறைத்தது. 
மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும். திமுக அரசின் திட்டங்களால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவாக உள்ளது. 
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் மூலம் கோயில்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 
ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும். 
அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இயற்கை திமுக ஆட்சிக்கு கொடுத்த வரத்தால், இந்தாண்டும் மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 
ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் கூட எதையும் செய்யவில்லை. ஊர்ந்து கொண்டிந்த தமிழ்நாட்டை, ஓராண்டில் திமுக அரசு தலை நிமிர வைத்திருக்கிறது. வீழ்ச்சியுற்று இருந்த தமிழ்நாடு, இன்று எழுச்சியுற்றுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.