அமைச்சர்கள் வடம்பிடித்து வெள்ளோட்டம்… 300 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்திற்கு தயாராகும் கோயில்!

க.சண்முகவடிவேல், திருச்சி

லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் வடம் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயிலின் உப கோயிலாகும்.

இந்த ஆலயத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக திருதேரோட்ட விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக தேரை உருவாக்க வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு அன்பில் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழரின் முதன்மை அமைச்சராக இருந்தவர் அன்பில் அநிருத்தராய பிரம்மராயர். அவரது சொந்த ஊரான லால்குடி அருகே உள்ள மேல அன்பில் கிராமத்தில் புகழ் பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 4-வது தலமாக இது விளங்குகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயிலின் உப கோயிலாகவும் இது விளங்குகின்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று இந்த கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது. ஆனால், கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சில காரணங்களால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.வி.சம்பத் என்பவர் மூலமாக ரூ.90 லட்சம் மதிப்பில் இலுப்பை மரங்களை கொண்டு 12 அடி 10 அங்குலம் நீளம், 12 அடி 10 அங்குலம் அகலம், 12 அடி 10 அங்குலம் உயரம் என்ற அளவில் சுமார் 20 டன் எடையில் புதிய மரத்தேர் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கோவிலை சுற்றி வெளிப்பிரகாரத்தில் 984 அடி நீளத்திற்கு புதிய தேரோட்ட பாதை அமைக்கும் பணி ரூ.98 லட்சம் மதிப்பில் இந்திய கலாச்சார மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகளும் 100 சதவீதம் முடிவுற்ற நிலையில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்த புதிய தேர் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மேல அன்பில் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

இந்தக் கோவிலில் தேக்கு மரத்தில் புதிய கொடி மரமும் நன்கொடையாளர் சதீஷ் வரதராஜன் என்பவர் மூலம் ரூ.9.90 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளது. புதிய கொடிமரத்துக்கு அடுத்த மாதம் மூன்றாம் தேதி கருங்கல் பீடத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

300 ஆண்டுகளுக்குப் பின்னர் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.