`சரித்திர பதிவேடு குற்றவாளி டு பாஜக பிரமுகர்' – பாலசந்தர் கொலை பின்னணி இதுதான்!

சென்னை சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரின் மகன் பாலசந்தர் (30). இவர் பா.ஜ.க எஸ்.சி, எஸ்.டி பிரிவின் மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்தார். இவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிந்தாரிப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் பாலசந்தரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆரம்பத்தில் இவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவரின் இந்து மக்கள் கட்சியில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் சிந்தாரிப்பேட்டை இந்து மக்கள் கட்சி அலுவலகம் முன் பசு மாட்டின் தலை வீசப்பட்டது. இதுதொடர்பான புகாரில் பாலசந்தர், கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை

இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியிலிருந்து பா.ஜ.க-வில் பாலசந்தர் இணைந்தார். இவர் மத்திய அமைச்சர் எல்.முருகனின் தீவிர ஆதரவாளராக இருந்ததால் பா.ஜ.க-வில் பதவி வழங்கப்பட்டது. ஏற்கெனவே பாலசந்தர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்ததாலும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாலும் தன்னுடைய பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் நியமிக்க வேண்டும் என பாலசந்தர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பாலசந்தருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனால் பாலசந்தர் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் அவருடன் செல்வார்.

ஜாமீனில் வெளியிலிருந்த பாலசந்தருக்கும் சிந்தாரிப்பேட்டையிலிருக்கும் பிரபல ரௌடி ஒருவர் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. அதனால் அந்தத் தரப்பு, பாலசந்தரைத் தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருந்தது. அது தொடர்பாக பாலசந்தர் தரப்பினர் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்து சிலரைக் கைது செய்தனர். இந்தச் சூழலில் பாலசந்தரின் உறவினர் ஒருவர் ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். அந்தக் கடைக்குச் சென்ற ரௌடி தரப்பினர், துணியை எடுத்துவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். இந்தத் தகவல் பாலசந்தருக்கு தெரியவந்ததும் அவர், சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கொலை

அதன்பேரில் போலீஸார் சில தினங்களுக்கு முன்பு பிரபல ரௌடி, அவரின் தரப்பு மீது நடவடிக்கை எடுத்தனர். அதனால் ஆத்திரமடைந்த ரௌடி தரப்பினர் பாலசந்தரைக் கொலைசெய்ய வியூகம் அமைத்தனர். இந்த நிலையில் கீழ்ப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த பாலசந்தர், தன்னுடைய பாதுகாப்பு காவலருடன் நேற்றிரவு சிந்தாரிப்பேட்டைக்கு சென்றிருக்கிறார். அங்கு தன்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்து பாலசந்தர் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்ததால் பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன், டீ குடிக்க சென்றார். ஏற்கெனவே பாலசந்தரை பின்தொடர்ந்து வந்த ரௌடி தரப்பு, திடீரென கத்தியால் அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து சிந்தாரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலசந்தரைக் கொலை செய்தவர்களைத் தேடிவருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடையபோவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த பாலசந்தர், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பட்டியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அவரின் உயிருக்கு ஆபத்து என்று கூறியதால் போலீஸ் பாதுகாப்பு பாலசந்தருக்கு வழங்கப்பட்டிருந்தது. பாலசந்தரைக் கொலை செய்ய திட்டமிட்ட கும்பல், அதற்கான நேரத்துக்காக காத்திருந்துள்ளது. இந்தச் சமயத்தில்தான் பாலசந்தர், தன்னுடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த அந்தக் கும்பல் பாலசந்தரை சுற்றி வளைத்து நண்பர் கண் முன்பே கொலை செய்திருக்கிறது. பின்னர் பைக்கில் தப்பிச் சென்ற அந்தக் கும்பல் உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறது. சிசிடிவி மூலம் அதை உறுதிப்படுத்தி கொலையாளிகளைப் பிடிக்கச் சென்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீஸ்

இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அரசியல் ஆதாயத்துக்காக பாலசந்தர் கொலை செய்யப்படவில்லை. முன்விரோதம் காரணமாகத்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பாலசந்தர் கொலைக்கான காரணம் தெரிந்துவிட்டதால் குற்றவாளிகளைத் தேடிவருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.