பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு பணியில் 22,000 போலீஸார் ஈடுபட உள்ளதாகவும், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: பிரதமர் நரேந்திர மோடி 26.05.2022 அன்று மாலை, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க நாளை (26.05.2022) சென்னை வருகிறார். இந்நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

அதன்பேரில், பிரதமரின் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தலைமையில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில், 5 கூடுதல் ஆணையாளர்கள், 8 காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை துணை தலைவர்கள் (JCs and DIGs), 29 காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் (DCs and SPs), சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வருகை தரும் சென்னை விமான நிலையம், சென்னையில் செல்லும் வழித் தடங்கள், நிகழ்ச்சி நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டும், சென்னையில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பாரத பிரதமரின் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

டிரோன்கள் பறக்க தடை: பாரத பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், கு.வி.மு.ச. பிரிவு 144-ன் கீழ், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (மே 26) வரை, டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.