அலேக்காக தூக்க கழுகு போல் வட்டமிடும் பாஜ எம்எல்ஏ.க்களை அடை காக்கும் காங்.சொகுசு விடுதிகளில் தங்கவைப்பு: மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் 4 இடங்களை கூடுதலாக பெற திட்டமிட்டு உள்ள பாஜ. தனது ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களையும், தனது கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வதற்காக காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏ.க்களை அலேக்காக தூக்க வட்டமிட்டு வருகிறது. அதனிடம் இருந்து காப்பாற்ற, ராஜஸ்தான், அரியானா எம்ல்ஏ.க்களை பாதுகாப்பான இடங்களுக்கு காங்கிரஸ் அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளது.நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் போட்டியின்றி பலர் தேர்வாகி உள்ளனர். அதே நேரம், ராஜஸ்தான், கர்நாடகா (தலா 4 இடங்கள்), மகாராஷ்டிரா (6 இடங்கள்), அரியானா (2 இடங்கள்) ஆகிய 4 மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலங்களில் பாஜ.வும், காங்கிரசும் கூடுதல் இடங்களை பெறுவதற்கு  போதிய எம்எல்ஏ.க்கள் பலம் இல்லாததால், சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. ராஜஸ்தானில் உள்ள 4 மாநிலங்களவை எம்பி பதவிகளில் 2ல் காங்கிரசும், ஒன்றில் பாஜவும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்ற இரு கட்சிகளுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், யாரும் எதிர்பாராத திருப்பமாக எஸ்செல் குழுமத்தின் தலைவரும், ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவருமான சுபாஷ் சந்திரா, பாஜ ஆதரவோடு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரமோத் திவாரி களமிறங்கி இருக்கிறார். எனவே, இந்த 3வது இடத்தில் வெற்றி பெறுவதற்கு காங்கிரசுக்கு மேலும் 15 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவை. இதேபோல், 2வது இடத்தை கைப்பற்றுதற்கு பாஜ.வுக்கு 11 வாக்குகள் தேவை. அதேபோல், அரியானாவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் வினோத் சர்மாவின் மகனும், அரியானா  முன்னாள் சபாநாயகர் குல்தீப் சர்மாவின் மருமகனுமான கார்த்திகேய சர்மா, பாஜ ஆதரவுடன் களமிறங்கி உள்ளார். இங்கு மொத்தமுள்ள 2 இடங்களை பிடிக்க பாஜ-காங். மற்றும் மாநில கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவை பொருத்த வரையில் 4 இடங்களுக்கு 6 வேட்பாளர்கள்  மனு தாக்கல் செய்துள்ளனர். இங்கு பாஜ சார்பில் லஹர் சிங் கூடுதலாக  போட்டியிடுகிறார். நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனும் இங்குதான் களம்  கண்டுள்ளார். இங்கு, பாஜ.வுக்கு 119 எம்எல்ஏ வாக்குகள் இருப்பதால், நிர்மலா  சீதாராமன் மற்றும் ஜக்கேஷ் ஆகியோர் வெற்றி உறுதியாகி உள்ளது. காங்கிரசில்  போட்டியிடும் ஜெய்ராம் ரமேஷூக்கு வெற்றி உறுதியாகி உள்ளது. 4வது இடத்தை  பிடிக்க காங்கிரசும், பாஜ.வும் மஜதவின் ஆதரவை நாடி உள்ளன. இதனால்,  கர்நாடகாவில் கேம் சேஞ்சராக மஜத எம்எல்ஏக்கள் மாறி உள்ளனர்.மகாராஷ்டிராவில்  உள்ள 6 இடங்களில் பாஜ மூன்று வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதே நேரத்தில்  சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 4 வேட்பாளர்கள்  நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராஜீவ் சுக்லா மற்றும் ரஞ்சீத்  ரஞ்சன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜ.வுக்கு  3வது இடம் கிடைப்பது கேள்விக்குறிதான். இருப்பினும், மூன்றாம் இடத்தையும் பெற பாஜ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த மாநிலங்களவை தேர்தல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முக்கியமாக கருதப்படுவதால், மேற்கண்ட 4 மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி நிலவும் உட்கட்சி பூசலை பயன்படுத்தி, குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்கள் இழுக்கும் முயற்சியில் பாஜ இறங்கி உள்ளது. இதற்காக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.க்களை அலேக்காக தூக்குவதற்கு, பாஜ கழுகு போல் வட்டமிட்டு வருகிறது. இதற்காக, 4 மாநிலங்களுக்கும் பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தேர்தல் நடக்கும் வரை ராஜஸ்தானில் உள்ள 40 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை உதய்பூரில் உள்ள  ரிசார்ட்டுக்கும், அரியானா காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை தனது ஆட்சி நடக்கும் சட்டீஸ்கர் மாநிலத்துக்கும் சொகுசு பேருந்துகள் மூலம் கட்சி மேலிடம் அழைத்து சென்று தங்க வைத்துள்ளது. பாஜ, காங்கிரஸ் இரு கட்சிகளும் அதிக இடங்களை பிடிக்க சுயேச்சை எம்எல்ஏக்களை நாடி உள்ளதால், அவர்களுக்கும் கடும் மவுசு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் – பாஜ இடையே ஏற்பட்டுள்ள இந்த ஆள்பிடிப்பு போட்டியால், மாநிலங்களவை தேர்தல் களை கட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.