சென்னை அருகே மது போதையில் தகராறு- லாரியை ஏற்றி 2 வாலிபர்கள் கொலை

செங்குன்றம்:

சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம் பகுதியில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டுகள் செயல்பட்டு வருகின்றன.

மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இருந்து வடபெரும்பாக்கம் வழியாக புழல், செங்குன்றம் பகுதிகளுக்கு செல்லும் மாதவரம் நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவர் நடத்தி வருகிறார்.

இங்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களான கமல் என்ற கமலக்கண்ணன், குமரன், நவீன் ஆகியோர் மது குடிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு 7.30 மணி அளவில் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர் மற்றும் கிளீனரிடம் 2 பேரும் சாப்பிடுவதற்கு சப்பாத்தி இருக்கிறதா? என கேட்டுள்ளனர். இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கமல், குமரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு அதனை வேகமாக பின்னோக்கி ஓட்டினார். மின்னல் வேகத்தில் லாரியை ஓட்டிச் சென்ற அவர் கமல், குமரன், நவீன் ஆகியோர் மீது லாரியை ஏற்றினார். இதில் இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். நவீன் படுகாயம் அடைந்தார்.

பின்னர் டிரைவர், லாரியை திருப்பி சிறிது தூரம் ஓட்டிச் சென்று விட்டு தப்பினார். அவருடன் இருந்த கிளீனரும் தலைமறைவானார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரி யார்டுக்கு திரண்டு சென்றனர். அவர்கள் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகளின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர்கள் முருகேசன், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கொடிராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கமல், குமரன் இருவர் மீதும் லாரியை ஏற்றி அவர்களது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் கண்ணையாலால்சிங், கிளீனர் கிரீஸ்குமார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

உயிரிழந்த கமல், குமரன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒன்றாக ஒரே பள்ளியிலேயே படித்துள்ளனர். இருவரும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தனர். கார்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்த இருவரும் ஒரே நேரத்தில் கொலையுண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடபெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக அங்கு போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட கமல், குமரன் இருவருமே இளம் வயதை சேர்ந்தவர்கள். கமலுக்கு 36 வயதும், குமரனுக்கு 34 வயதும் ஆகிறது. இருவருக்கும் திருமணமாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர்.

படுகாயத்துடன் உயிர் தப்பிய நவீனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர், கிளீனர் இருவரும் சேர்ந்து லாரியை ஏற்றி 2 வாலிபர்களை கொலை செய்துள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து செங்குன்றம் பகுதியில் வடமாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.