15% படிதார் வாக்குவங்கி மூலம் காங்கிரஸ்சை வீழ்த்த பா.ஜ.க. வியூகம்

படேல் என்று அழைக்கப்படும் படிதார் சமூகம் முழுவதுமாக பாரதிய ஜனதா கட்சி பக்கம் சாய்ந்துவிட்டால், காங்கிரஸ் கட்சியை 2022 குஜராத் சட்டசபை தேர்தலில் மீண்டும் வீழ்த்தலாம் என்கிற வியூகத்துடன் ஹர்திக் படேலை தன்வசம் ஈர்த்துள்ளது பாஜக.
ஏற்கெனவே இதே சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர படேலை முதல்வராக்கியதன் மூலம் படிதார் மக்களின் கோபத்தை தணித்துள்ள பாஜக. அடுத்தகட்டமாக டிசம்பர் மாத சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஹர்திக் படேல் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு படேல் வாக்குகள் கிடைக்காதபடி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. குஜராத் மக்கள்தொகையில் 15 சதவிகிதமாக படிதார் சமூகம் உள்ள நிலையில் வியாபாரம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் படேல்கள் வசம் உள்ள சூழலில், இந்த சமுதாயத்தில் அரசியல் ஆதிக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குஜராத்  முதல்வராக இருந்த நரேந்திர மோடி 2014ஆம் வருடத்தில் பிரதமராக பதவியேற்ற பிறகு 2017ஆம் வருடத்தில் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில், படிதார் சமுதாயத்தின் அதிருப்தி பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அப்போது பல போராட்டங்களுக்கு தலைமைவகித்த ஹர்திக் படேல்தான் பாஜக-வுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். அத்தகைய சூழல் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும், ஹர்திக் படேல் மூலம் காங்கிரசை ஓரம் கட்டவும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை திட்டமிட்டுள்ளது.
image
நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்திய சமயத்திலிருந்தே படிதார் சமுதாயம் அந்த கட்சியின் முக்கிய ஆதரவாக இருந்துவந்தது. ஆனால் விஜய் ரூபாணி முதல்வராக்கப்பட்டபோது, படேல் சமுதாயத்துக்கு அந்த வாய்ப்பு ஏன் அளிக்கப்படவில்லை என்கிற கேள்வி எழுந்தது. இந்த அதிருப்தியை பயன்படுத்தி ஹர்திக் படேல் உள்ளிட்டோர் படிதார் சமுதாயத்தின் போராட்டத்தை வலுவாக்கி மாநிலத்தை ஆண்டுவந்த பாரதிய ஜனதா கட்சி அரசை கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கினர்.
அப்போது மோடி-அமித்ஷா உள்ளிட்டோர் தீவிரமாக களமிறங்கி சூழலை சமாளித்தாலும், பாரதிய ஜனதா கட்சியை மீண்டும் வலுப்படுத்த நீண்டகால திட்டம் அமல்படுத்த தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் பூபேந்திர படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். அந்த சமயம் முதலே, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா படிதார் சமுதாய நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வருகின்றனர். படேல்களை முழுவதுமாக பாஜக வசம் ஈர்க்கும் திட்டத்தின் அடுத்த கட்டமாக ஹர்திக் படேல் தற்போது கட்சிக்குள் நுழைந்துள்ளார்.
image
பாரதிய ஜனதா கட்சியில் ஏற்கெனவே பல படேல் சமுதாய தலைவர்கள் உள்ளனர். இவர்களில் பலருக்கு ஹர்திக் வருகை வேப்பங்காயாக உள்ளது. இந்நிலையில் கட்சிக்கு இவர் தேவையா என தங்கள் அதிருப்தியை பாஜகவில் ஏற்கெனவே உள்ள பல மூத்த தலைவர்கள் கேட்டு வருகின்றனர். ஆகவேதான் ஹர்திக் படேல் வருகையை பாரதிய ஜனதா கட்சி பெரிதாக கொண்டாடவில்லை. மோடி-ஷா உள்ளிட்ட தலைவரால் இல்லாமல், மாநில பாஜக தலைவர் பாட்டீல் மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் அகமதாபாத் நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது என கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
image
அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவர் பதவியை ஹர்திக் படேல் உதறி, தலைமையை விமர்சனம் செய்து வெளியேறி உள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஹர்திக் படேல் வெளியேறி தலைமையை விமர்சனம் செய்வது பாஜக-வுக்கு சாதகம் என அவர்கள் கருதுகின்றனர்.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.