5 கிலோ நகை கொள்ளை வழக்கு: திணறும் தஞ்சை போலீஸ்; சி.சி.டிவி காட்சிகளை வெளியிட தயக்கம் ஏன்?

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, கடந்த 31-ம் தேதி இரவு  5 கிலோ நகை மற்றும் ரூ.14 லட்சம் கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்கள் தொடர்பாக இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்ற நகை மொத்த வியாபாரியிடம் கடந்த 31-ம் தேதி இரவு  5 கிலோ நகை மற்றும் ரூ.14 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்கள் தொடர்பாக இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் கொள்ளையர்களைக்  கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளன. எனினும், தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது நடைபெற்று வரும் பணிகள் காரணமாக நகரின் முக்கிய இடங்களில் காவல்துறையினரால் ஆங்காங்கே நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது செயல்படாததால் கொள்ளைச் சம்பவம் நடைபெற்று 36 மணி நேரத்திற்கு மேல் ஆகியும்   கொள்ளையர்கள் எங்கிருந்து வந்தார்கள், கொள்ளையடித்து விட்டு எங்கே எப்படி தப்பிச் சென்றார்கள் என காவல்துறையினரால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.

கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் வர்த்தக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இச் சம்பவத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 9 நபர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கொள்ளையர்களில் 3 நபர்களின் உருவம் மட்டும் சற்று தெளிவாக பதிவாகியுள்ளது. அவர்களது முகச் சாயலை வைத்து  மேற்படி கொள்ளையர்கள் ஆந்திரா அல்லது தெலுங்கானா மாநிலத்தவர்களாக இருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் மூவரின் படங்களை பத்திரிகைகளில் வெளியிடவில்லை.

கொள்ளையர்களின் படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டால் அதைப் பார்த்துவிட்டு கொள்ளையர்கள் எச்சரிக்கை அடைந்து வெளியே தலை காட்ட மாட்டார்கள் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

அதேபோல, இதுபோன்ற தருணங்களில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் நீண்ட காலம் பணியாற்றிய, குற்றப்புலனாய்வில் திறமைவாய்ந்த, அனுபவமிக்க காவல்துறை அதிகாரிகளை வரவழைத்து அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் தற்போது திறமை மற்றும் அனுபவம் அடிப்படையில் அல்லாமல், ஜாதி மற்றும் அரசியல் செல்வாக்கு அடிப்படையிலேயே பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் மிக முக்கிய பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர். அதன் விளைவே இன்றைக்கு அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இன்ஸ்பெக்டர்கள் ஓரங்கட்டப்பட்டு எந்தவொரு குற்றப்புலனாய்வு திறமையும் ,அனுபவமும் இல்லாதவர்கள் சட்டம் ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான பலனை இதுபோன்ற முக்கிய தருணங்களில் காவல்துறையினர் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.