‛கைதி' பார்த்துவிட்டு ‛விக்ரம்' உலகுக்கு வாருங்கள் – லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து திரைக்கு வரும் படம் ‛விக்ரம்'. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் நாளை(ஜூன் 3) திரைக்கு வருகிறது. படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு….

இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சிறு வயது முதலே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்திருக்கிறேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கி இருக்கிறேன். இன்னமும் இது ஒரு கனவை போல் உள்ளது.

இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. விக்ரம் படம் தொடங்கி 18 மாதங்கள் ஆகின்றன. ரத்தமும், வியர்வையும் சிந்தி ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை நம் நாட்டின் பெருமிதத்தை கமல்ஹாசனை கொண்டாடவும் உழைத்துள்ளோம். வாய்ப்புக்கு நன்றி சார். இந்த படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது. இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்.

இன்னும் சில மணிநேரங்களில் இந்த படம் உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். ‛கைதி'யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு ‛விக்ரம்' அழைத்து செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லோகேஷின் இந்த அறிவிப்பை பார்க்கும்போது விக்ரம் படம், கைதி படத்தின் தொடர்ச்சியாக கைதி 2ம் பாகமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.