நீலகிரி: “காக்க வச்சி ஏமாத்திட்டாங்க" – வாக்குவாதத்தில் முடிந்த கருணாநிதி பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 99- வது பிறந்தநாள் விழா திமுகவினர் சார்பில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் அக்கட்சியினர் சார்பில் கருணாநிதியின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், மக்களுக்கு உதவி பொருள்களையும் வழங்கி வருகின்றனர்.

கருணாநிதி பிறந்தநாள் விழா

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட திமுக சார்பில் குன்னூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குன்னூரில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்று ஏழை மக்களுக்கு உதவி பொருள்களை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர்கள் அங்கிருந்து கிளம்பியதும் திமுக நிர்வாகிகள் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு அரசி, போர்வை போன்ற உதவிப் பொருள்களை வழங்கி வந்தனர். வரிசையில் காத்திருந்த பலருக்கு டோக்கன் இல்லை என உதவி பொருள்களைத் தர மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த மக்கள் கட்சி நிர்வாகிகளைச் சூழ்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

உதவி பொருள்கள் கிடைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் நம்மிடம் பேசுகையில், “நாங்க எங்க பாட்டுக்கு காலையில கூலி வேலைக்கு போயிட்டு இருந்தோம். யாரோ அமைச்சர் எல்லாம் வராங்க வந்து உக்காருங்கம்மா, உங்களுக்கு உதவி பொருள் எல்லாம் தருவோம்ன்னு சொல்லி உட்கார வச்சாங்க. நாங்களும் காலையில இருந்து டீ, காப்பிக் கூட இல்லாம உட்கார்ந்துக் கிடந்தோம். இப்போ பொருளைக் கேட்டா டோக்கன் இல்லைன்னு சொல்லி வெரும் கையா அனுப்புறாங்க‌. அவங்களுக்கு வேண்டப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் டோக்கன் கொடுக்குறாங்க. எங்களைக் காக்க வச்சி ஏமாத்திட்டாங்க. இது என்னங்க நியாயம்” என கொந்தளித்தனர்.

கருணாநிதி பிறந்தநாள் விழா

இந்த விவகாரம் குறித்து குன்னூரைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம், “குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவி பொருள்களை கொடுக்க ஏற்பாடு செய்திருந்தோம். திடீரென கூட்டம் அதிகமாகவிட்டது. அனைவருக்கும் கொடுக்க முடியவில்லை‌. அடுத்த முறை கட்டாயம் கொடுத்து விடுவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.