அண்ணாமலைக்கு தி.மு.க. பதிலடி: மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும்- அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் இபிஎஸ், ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது, எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதி மன்றத்தில் உள்ளதால் அதிலேயே சிறந்த முறையில் வாதாடி நிச்சயமாக நிறைவேற்றி விட முடியும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்ற காரணத்தால்தான் மேல்முறையீடு செய்துள்ளோம், எந்தப் பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டங்கள் நடந்தாலும் காவல்துறையினர் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே பா.ஜ.க போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இல்லை என்பதற்கு அவர்கள் உதாரணமாக நேற்றைய தினம் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்து கொண்டனர்,

மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும்.

கடந்த ஆட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது ஒருவரது குடோனில் சோதனை நடத்தி அதில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. அது அனைவருக்கும் தெரியும். தற்போதுள்ள ஆட்சியில் எந்த அளவுக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துக் கொண்டுதான் உள்ளோம். இருப்பினும் வெளிமாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அதையும் முடிந்த அளவு தடுத்து கொண்டுதான் உள்ளோம். கஞ்சா விற்பனையை முடிந்தளவு கட்டுப்படுத்தி அது இல்லை என்ற நிலையை கொண்டுவர தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது.

அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியதற்கு, மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.