'சுய திருமணம் இந்து மதத்திற்கு எதிரானது; கோயிலில் அனுமதி கிடையாது' – பாஜக தலைவர் 

வதோதரா: தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வது இந்து மதத்திற்கு எதிரானது. ஆகையால் சம்பந்தப்பட்ட பெண் கோயிலில் அத்திருமணத்தை செய்ய முற்பட்டால் அது அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த இளம் பெண் ஷாமா பிந்து (24). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவருக்கு எந்த ஆணையும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை. ஆனால், மணப்பெண்ணாக வேண்டும், நெற்றியில் திலகமிட்டு வலம் வரவேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது. இதனால், அனைத்துவிதமான சடங்குகளுடன், வரும் 11-ம் தேதி தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள இவர் முடிவு செய்துள்ளார். இதுதான் குஜராத்தில் நடைபெறும் முதல் சுய திருமணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அனுமதி கிடையாது: இந்நிலையில், இந்த சுய திருமணத்துக்கு உள்ளூர் பாஜக தலைவர் சுனிதா சுக்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுனிதா, வதோதராவின் ஷாமா பிந்து தன்னைத் தானே திருமண செய்வதாக அறிவித்துள்ளார். இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. மேலும் அவர் கோயிலில் திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். அதற்கு அனுமதி வழங்க முடியாது. சுய திருமணம் செய்தால் இந்துக்களின் மக்கள் தொகையில் சரிவு ஏற்படும். மதத்திற்கு எதிராக சென்றால் சட்டம் ஒழுங்கே இருக்காது என்று கூறியுள்ளார்.

என் விருப்பமே முக்கியம்: சுய திருமணம் குறித்து ஷாமா பிந்து கூறும்போது, “எனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஆனால், மணப்பெண்ணாக வேண்டும் என விரும்புகிறேன். அதனால், என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். நாட்டில் எங்கேயாவது சுய திருமணம் நடந்துள்ளதா என இணையதளத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால், எந்த தகவலும் இல்லை. நம் நாட்டில் தன்னைத் தானே நேசிக்கும் நபருக்கு உதாரணமாக நான் இருக்கலாம். மக்கள், தாங்கள் நேசிக்கும் நபரை திருமணம் செய்கின்றனர். நான் என்னையே நேசிக்கிறேன். அதனால்தான் இந்த திருமணம். சுய திருமணத்தை சிலர் அர்த்தம் இல்லாததாக கருதலாம். எனக்கு என் விருப்பம் முக்கியம். எனது பெற்றோரும், எனது திருமணத்துக்கு திறந்த மனதுடன் ஆசி வழங்கியுள்ளனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.