நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் – தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு, நகரங்களில் பெரும் அளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளன.

சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் 2-வது சனிக்கிழமைகளில் பெரிய அளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தைப் பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காக்களில் கூட்டம் நடத்தியும், துண்டுப் பிரசுரம், மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் தங்க சாலை மேம்பாலப் பூங்கா அருகில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ என்ற தீவிர தூய்மைப் பணி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் மாணவ, மாணவிகள், மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

இதையடுத்து, பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்க சாலை மேம்பாலத்தின்கீழ் உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டு, நகர்ப்புற அடர்வனம் அமைக்கும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதன்பின், தீவிர தூய்மைப் பணி, மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி, மாணவ, மாணவியருடன் ராயபுரம் பாஷ்யகாரலு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற முதல்வர், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.