பீகார் சிறுமிக்கு குரங்கம்மையா? உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

நொய்டா: உலகளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வந்த பீதி இப்போது தான் சிறிது அடங்கி இருக்கிறது. அதற்குள், குரங்கம்மை பரவி வருகிறது. தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 500க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள இது, வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் இதுவரையில் யாருக்கும் தொற்றவில்லை. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமிக்கு இந்த நோய் பரவி இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த ஒருவர், உத்தர பிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 5 வயது மகள், 7 வயது மகன் உள்ளனர். சிறுமிக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதால், தியாகி என்ற மருத்துவரின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சிறுமிக்கு சிகிச்சை அளித்த தியாகி, அவளுடைய நெற்றியில்  கொப்பளங்கள் இருப்பதை கண்டார். அடுத்த சில நாட்களில் அது உடல் முழுவதும் பரவியது. இது, குரங்கம்மைக்கான அறிகுறியாக தென்பட்டதால், உடனே மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அவர் தலைமையிலான மருத்துவர்கள் குழு, சிறுமியை தனிப்படுத்தி, அவளுடைய ரத்த மாதிரிகளை புனேயில் உள்ள தேசிய பயோலாஜிக்கல் நிலையத்துக்கு அனுப்பி உள்ளனர். சிறுமியின் அண்ணனுக்கும் சில நாட்களுக்கு முன் இதேபோல் கொப்பளங்கள் வந்து, உடல் முழவதும் பரவி குணமாகி இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்த குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிறுமியின் மருத்துவ முடிவுகள் வந்த பிறகுதான், அது குரங்கம்மையா? வேறு விதமான சரும நோயா? என்பது உறுதியாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.