மாநில அமைச்சரவை ஒப்புதல் :  பல்கலை வேந்தராகும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில பலகலைக்கழகங்களுக்கு வேந்தராக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். எனவே பட்டமளிப்பு விழாவும் ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. அத்துடன் துணை வேந்தரை நியமிப்பதிலும் ஆளுநர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன.  இவற்றுக்கு ஆளுநர் வேந்தராக செயல்படுகிறார். பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே மோதல் நிலவி வருகிறது.

அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெக்தீப் தன்கர் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது மேற்கு வங்க பல்கலைக்கழகங்களுக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அடுத்து வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அவையின் ஒப்புதலும் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல்கலை. வேந்தராக ஆளுநர் செயல்பட முடியாதபடி மேற்கு வங்க சட்டப்  பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.