“வெறுப்பு, வெறுப்பை மட்டுமே வளர்க்கும்; இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது" – ராகுல் காந்தி காட்டம்

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியது சர்ச்சையானது. அதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சு மற்ற மதங்களை இழிவு படுத்துவதாகக் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரம் தேசியளவில் விவாதப்பொருளான நிலையில், டெல்லி பா.ஜ.க-வைச் சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டார்.

நுபுர் சர்மா

அதையடுத்து, சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. அதைத் தொடர்ந்து முகமது நபிகள் குறித்ததான சர்ச்சை கருத்து காரணமாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பா.ஜ.க-வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பா.ஜ.க மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், காவல்துறையும் நுபுர் சர்மாமீது வழக்கு பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க தலைமை

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் கடுமையாக எதிரானது என்ற பா.ஜ.க.வின் அறிக்கையானது அப்பட்டமான போலியான பாசாங்கு என்பதைத் தவிர வேறில்லை, இது வெளிப்படையான கேலிக்கூத்து மட்டுமல்ல, அதனால் ஏற்படும் விளைவைக் கட்டுப்படுத்த செய்யப்படும் போலி முயற்சி.

ராகுல் ட்வீட்

குறுகிய காலத்தில் பா.ஜ.க இந்தியாவைத் தனது பார்ப்பனிய அரசியலுக்கு அடிபணியும் இருண்ட யுகத்திற்குத் தள்ளியுள்ளது. அதேபோல பா.ஜ.க தலைவர்களும், அதன் உறுப்பினர்களும் செய்த ஒரே வேலை என்ன தெரியுமா? இந்தியாவின் உலகளாவிய அளவில் கொண்டாடப்படும் `வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்தில் பிளவை உருவாக்கியது தான். பா.ஜ.கவும் அதன் தலைமையும் தங்களின் அதிகார ஆசையால் அரசியலுக்கு ஏற்படுத்திவரும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்பு, வெறுப்பை மட்டுமே வளர்க்கும். அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் பாதை மட்டுமே இந்தியாவை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது” எனப் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.