Doctor Vikatan: மஞ்சள் நிற பற்களை வெளுப்பாக்க முடியுமா?

எனக்கு வயது 35. பற்கள் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. டூத் வொயிட்டனிங் சிகிச்சை செய்துகொண்டால் மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்றலாம் என்கிறார்கள். அது என்ன மாதிரியான சிகிச்சை? அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்குமா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, பல் மருத்துவர் மரியம் சஃபி

நீங்கள் குறிப்பிடுகிற டூத் வொயிட்டனிங் சிகிச்சை என்பது ப்ளீச்சிங் செய்வது போன்றது. ப்ளீச்சிங் அவசியமானதா என்று கேட்டால் அது அழகியல் சார்ந்த ஒரு சிகிச்சை. அதாவது உங்களின் பற்களின் நிறத்தைப் பளிச்சென மாற்றும் சிகிச்சை.

பல் மருத்துவர் மரியம் சஃபி

சிகிச்சை பற்றி யோசிப்பதற்கு முன் உங்களுடைய பற்களைப் பரிசோதித்து, அவை ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். பற்களில் ஏற்படும் நிற மாற்றத்தை Extrinsic மற்றும் Intrinsic என இருவகையாகப் பிரிக்கலாம். அதாவது எக்ஸ்ட்ரின்சிக் வகை கறையில், பற்களின் மேற்பரப்பில் நிற மாற்றம் இருக்கும். அதுவே இன்ட்ரின்சிக் வகை கறையில் பற்களின் உள் பகுதியில் நிற மாற்றம் இருக்கும்.

உங்களுக்கு எல்லாப் பற்களுமே நிறம் மாறியிருக்கின்றனவா அல்லது குறிப்பிட்ட பல் மட்டுமா என்பதையும் பார்க்க வேண்டும். அப்படி ஒருவேளை ஒரு பல் மட்டும் நிறம் மாறியிருந்தால் அதற்கான காரணம் தெரிய வேண்டும்.

எங்கேயாவது அடிபட்டதன் விளைவாலா அல்லது பல் நரம்புகளுக்கு இடையில் உள்ள திசுக்கள் சேதமடைந்ததாலா என்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரு பல்லுக்கு என்றால் அதற்கு வேர் சிகிச்சை செய்துவிட்டு, பிறகு அதன் மேல் போடப்படும் செராமிக் கிரவுன் மூலம் மஞ்சள் நிறத்தை மாற்றலாம். ப்ளீச்சிங்கில் நவீன சிகிச்சை முறைகள் பல வந்துள்ளன.

பல்

ஆனால் சென்சிட்டிவ் பற்கள் (பற்கூச்சம்) இருந்தாலோ, பல் எனாமல் தேய்ந்துபோயிருந்தாலோ, பற்களில் வேறு பிரச்னைகள் இருந்தாலோ, அந்த நிலையில் டூத் வொயிட்டனிங் சிகிச்சை மேற்கொண்டால், பல் கூச்சம் மேலும் அதிகரிக்கும்.

அதேபோல டூத் வொயிட்டனிங் சிகிச்சை மேற்கொள்பவர்கள், அதைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பல் ஈறுகளிலோ, பற்களைச் சுற்றியுள்ள பகுதியிலோ தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.