சென்னை: 3வது மாடிக்கு புடைவையை கட்டி ஏறிய ஐஏஎஸ் பயிற்சி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னை ஜாம்பஜாரில் 3 வது மாடியில் இருந்து புடவை அறுந்து விழுந்து சிவில் தேர்வு பயிற்சி மாணவி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. ஆண் நண்பர் கதவை திறக்காததால் மாடி வழியாக பால்கனிக்கு செல்ல முயன்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் மகிழ்மதி (25) சென்னை ஜாம்பஜார் தனாப்ப தெருவில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி பள்ளியில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்தார். நேற்று இவரது ஆண் நண்பர் ராஜ்குமார் என்பவர் மகிழ்மதி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த மகிழ்மதி கதவை தட்டியபோது கதவு திறக்கப்படாததால் உடனே ராஜ்குமாரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ராஜ்குமார் செல்போனை எடுக்காததால் பதற்றமடைந்த மகிழ்மதி பால்கனி வழியாக பின்பக்க கதவை திறந்து உள்ளே செல்ல திட்டமிட்டு 3வது மாடியில் இருந்து புடவை மூலம் பால்கனிக்கு இறங்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக புடவை அறுந்ததில் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்த மகிழ்மதி பலத்த காயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்குவந்த ஜாம்பஜார் போலீசார், மகிழ்மதி உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண் நண்பர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
image
விசாரணையில் ராஜ்குமார் அடையாறில் தங்கி பிரபல தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலைபார்த்து வருவது தெரியவந்தது. மேலும் நேற்று மகிழ்மதி ஊருக்கு செல்வதால் தன்னை அழைத்துச்செல்ல வேண்டும் என கேட்டதாகவும், அதற்காக மகிழ்மதி வீட்டிற்கு வந்ததாகவும் பின்னர் அசதியில் கதவை தாழ்ப்பாள்போட்டு விட்டு தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் மகிழ்மதி கதவு தட்டியது கேட்காததால் கதவை திறக்கவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.